புதுடெல்லி:
மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சந்தேஷ்காளி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பழங்குடியின மக்களின் நிலங்களை பறித்துக்கொண்டதாகவும், பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் கூறி பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தையே உலுக்கிய இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்காள அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், சந்தேஷ்காளி தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி அளித்தது. யாரோ ஒருவரை பாதுகாப்பதில் மேற்கு வங்காள மாநில அரசு ஏன் அக்கறை காட்ட வேண்டும்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையே மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கக்கூடாது என வலியுறுத்தி மேற்கு வங்காள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதாவது, வழக்குகளை சி.பி.ஐ. விசாரிப்பதற்கான பொது ஒப்புதலை 2018-ம் ஆண்டு மாநிலம் திரும்பப் பெற்றபோதிலும், சி.பி.ஐ. வழக்குகளை பதிவு செய்வதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களும் மே மாதம் 8-ம் தேதி நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, மாநில அரசின் ஒப்புதல் இன்றி சி.பி.ஐ. விசாரிப்பதற்கு எதிராக மேற்கு வங்காள அரசு தாக்கல் செய்த வழக்கு செல்லுபடியாகும் எனவும், விசாரணைக்கு ஏற்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேற்கு வங்காளத்தின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்ற மத்திய அரசின் வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர்.
டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற விதிகளை பரிசீலித்து இந்த தீர்ப்பை வழங்குவதாகவும், டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டம், மத்திய அரசின் அதிகாரங்களில் இருந்து மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கிறது என்றும் நீதிபதிகள் கூறினர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெறும்.
டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டம்-1946 பிரிவு 6-ன் படி, மாநில அதிகார வரம்பில் உள்ள வழக்குகளை சி.பி.ஐ. விசாரிப்பதற்கு அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
சந்தேஷ்காளி விவகாரம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. தொடரலாம் என நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், இன்றைய தீர்ப்பு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அடுத்தகட்ட விசாரணையின்போது கூடுதல் வாதங்கள் முன்வைக்கப்பட்டு, அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.