ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டறிய குழு அமைப்பு

ஜம்மு:

ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டறிந்து அவர்களை நாடு கடத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2021ல் ஜம்மு காஷ்மீர் காவல்துறை நடத்திய சோதனையில், மியான்மரைச் சேர்ந்த 270 ரோகிங்கியாக்கள் சிக்கினர். அவர்கள் ஹிரா நகர் தடுப்பு மையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல ஆண்டுகளாக வெளிநாட்டினர் தங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் கடந்த 13 ஆண்டுகளாக (2011-ம் ஆண்டு முதல்) சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக உள்துறை அமைச்சக நிர்வாக செயலாளர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்து பணிகளை எளிதாக்குவதற்காக இந்த குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை சேகரித்து, புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் ஆவணத்தை தொடர்ந்து பராமரிக்கும் பணி இந்த குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உள்துறை முதன்மைச் செயலாளர் சந்திரகர் பார்தி வெளியிட்டுள்ள உத்தரவில், இந்த குழு மாதாந்திர அறிக்கையைத் தயாரித்து, ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை கண்டுபிடித்து நாடு கடத்துவது தொடர்பான முயற்சிகளை இந்த குழு ஒருங்கிணைத்து மேற்பார்வையிட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.