`தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர மற்ற யாருக்கும் பாதுகாப்பு இல்லை' – டி.டி.வி.தினகரன் சாடல்!

கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர மற்ற யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஒரு நாளைக்கு மூன்று, நான்கு கொலைகள் நடக்கிறது. அதில் கைதாகிறவர்கள் எல்லாம் இருபது வயதிற்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். வேலை இல்லாததால் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள கஞ்சா கலாசாரம், போதைப்பொருள்கள் கலாசாரத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதுடன் ரூ.5,000, 10,000 கொடுத்தால் கொலை செய்கின்ற கூலிப்படைகளாக நிறைய இளைஞர்கள் மாறுகின்றனர்.

திருமண நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன்

தமிழக அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். சென்னை மாநகர கமிஷனரை மாற்றியதால் மாற்றம் வரப்போவதில்லை. முதல்வர் இரும்புகரம் கொண்டு அடக்குவோம் என்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலையில் உள்ளது. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், அப்போதுதான் சட்டம் ஒழுங்கு சரியாகும். தமிழகம் அமைதி பூங்காவாக மாறும். முன்னாள் அமைச்சர்கள் அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்கிறார்களா என்று தெரியவில்லை… எல்லாருமே ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான். அவர்கள் தான் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர்.

காவிரியில் தண்ணீர் வராமல் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். முதல்வரும் நம்ம மாவட்டம் என்று கூறுகிறார். தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது, அவர்களிடம் பேசி தண்ணீர் பெற்று தரவில்லை, மேகதாது அணை கட்டுவதையும் தடுக்கவில்லை. காங்கிரஸிடம் காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்த வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.