தேயிலை உற்பத்தியாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற உர மானியத்தை விட மேலதிகமான மானியமொன்றை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வழங்க திட்டம்

தேயிலை உற்பத்தியாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற உர மானியத்தை விட மேலதிகமான மானியமொன்றை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வழங்க திட்டமிட்டள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேயிலை உற்பத்தி அதிகரிப்புக்கு தடையாக இருப்பது உரம். உரங்களுக்கான விலை அதிகரிப்பை தொடர்ந்து, தேயிலை உற்பத்தியாளர்கள் தேயிலைக்கான உரங்களை பயன்படுத்துவதை மட்டுப்படுத்தியுள்ளனர். இதனால் கிடைக்கக் கூடிய விளைச்சலின் அளவு குறைவடைந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

தேயிலை பயிர்ச்செய்கை தொடர்பாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயன்த திசானாயக்க எழுப்பிய வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

மேலும், உயர் தொழில் நுட்பத்துடன், அதிக அடர்த்தியான தேயிலைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த முறைக்கமைய தற்போது கிடைக்கக்கூடிய விளைச்சலை விட மூன்று மடங்கு அதிக விளைச்சலை பெற முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்…

தேயிலை விளைச்சலை அதிகரிக்கக்கூடிய தொழில்நுட்பம் நாட்டில் காணப்படுகிறது. அந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு தேயிலை சபையின் நிதியத்திலிருந்து நிதியை வழங்கி அதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம்.

தேயிலை உற்பத்தித் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவை எதிர்வரும் 3 மதங்களுக்குள் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் ஓரிரு வருடங்களுக்குள் முன்பிருந்த நிலையை விட அதிக வளைச்சலை பெற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அதற்கான நிதியை ஜனாதிபதியும் நிதி அமைச்சரும் ஒதுக்கியுள்ளனர். நாடு பூராகவும் 29,875.24 ஹெக்டயர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. உலக தேயிலை சந்தையில் இலங்கைக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.