விக்கிரவாண்டி: அமைதியாக நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 031 வாக்காளர்களில், 99 ஆயிரத்து 944 பெண் வாக்காளர்கள் உட்பட 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மாலை 6 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகித்து வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மணிக்குப் பிறகு வாக்களிக்க வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவில் கவனம் ஈர்த்த சம்பவங்கள்:
> கப்பியாம் புலியூர் வாக்குச்சாவடியில் 87 பேருக்கும், வாக்கூர் வாக்குச்சாவடியில் 161 பேருக்கு, உலகலாம் பூண்டி வாக்குச்சாவடியில் 30 பேருக்கும், ஒட்டன் காடுவெட்டியில் 30 பேருக்கு என 308 பேருக்கு டோக்கன் விநியோகித்து வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடியும் நேரத்துக்கு முன் 160 வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்ததால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு 7.45 மணியை கடந்தும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
> கப்பியாம்புலியூர் வாக்குச்சாவடியில் 77 வயது முதியவரின் வாக்கை 15 வயது சிறுவன் செலுத்தியதாக பாமகவினர் வாக்குச்சாவடி அலுவலரிடம் புகார் தெரித்தனர். இதனை தொடர்ந்து சமூக நீதிப்பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு முன்னிலையில் வாக்கு செலுத்தப்பட்டதா என ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த வாக்கு செலுத்தப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் 30 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. பின்னர், வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. 6 மணிக்கு பின்னர் வந்தவர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கவில்லை.
> விக்கிரவாண்டி அருகே திருநந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மனைவி தனலட்சுமி (90) வயது முதிர்வு காரணமாக இவரால் நடக்க முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார். இன்று மாலை 5.30-க்கு அவரது உறவினர்கள் கட்டிலில் படுக்க வைத்து வாக்குச் சாவடிக்கு தூக்கி வந்து அவரது வாக்கை பதிவு செய்தனர்.
> விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி கக்கனுார் வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேகர் என்ற காவலர் அன்புமணியை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சியடைந்த அன்புமணி சேகரிடம் எப்படி நீங்கள் என்னை தடுத்து ஒருமையில் பேசலாம் என வாக்குவாதம் செய்தார். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த மற்ற போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.
> தொரவி கிராமத்தில் சாலையோரமாக பாமக நிர்வாகிகள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் பாமக, வழக்கறிலுர் பாலு உள்ளிட்டோரை கலைந்துச் செல்ல கூறியதால் போலீஸாருக்கும் பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஏடிஎஸ்பி திருமால் பாமகவினரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
> பனையபுரம் வாக்குச்சாவடியில் திமுகவினர் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அங்கு வந்த பாமவினர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 2 திமுக நிர்வாகிகளுடன் பணபட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். இதை பாமகவினர் தட்டிக் கேட்டனர். இதனால் திமுகவுக்கும் பாமகவுக்கும் மோதல் ஏற்படும் பதற்றமான சூழல் நிலவவே போலீஸார் இரு கட்சியினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பாமக வேட்பாளர் குற்றச்சாட்டு: காலையில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக வேட்பாளர் சி.அன்புமணி, “விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட விராட்டிகுப்பம் கே.வி.ஆர் நகரில் திமுகவினர் வாக்காளர்களுக்கு தலா ரூ.6000 அளித்துள்ளனர். இதேபோல தொகுதி முழுவதும் ரொக்கப் பணம், பரிசுப் பொருட்களைக் கொடுத்துள்ளனர்.
வி.சாத்தனூரில் பரிசுப் பொருட்களையும், ஆசாரங்குப்பத்தில் வேட்டி சேலையும் கொடுத்தபோது அதை பாஜகவினரும் பாமகவினரும் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனாலும் தேர்தல் ஆணையம் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் பாமக அமோக வெற்றி பெறும்” என்றார். அதேநேரம், வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அன்னியூர் சிவா, “தமிழக முதல்வரின் மக்கள் நலத் திட்டங்களால் இத்தொகுதியில் திமுக மிகப் பெரிய வெற்றி பெறும்” என்றார்.
முன்னதாக, விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14-ம் தேதி துவங்கியது. 24-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட 64 மனுக்களில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
தகுதியான மனுக்களில் யாரும் வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்களுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 26-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.