அபுதாபியில் இந்திய சிறுமி அரிய வகை நோயால் பாதிப்பு: கல்லீரலை தானமாக வழங்கி உயிரை காப்பாற்றிய தந்தை

அபுதாபி,

அபுதாபியில் 14 ஆண்டுகளாக வசித்து வரும் இந்தியர் இம்ரான் கான் (வயது 40). இவருக்கு திருமணமாகி ஷைமா என்ற மகள் இருந்தார். ஆனால் ஷைமா, குழந்தை பருவத்தில் தோன்றும் ‘பேமிலியல் இன்ட்ராஹெபாடிக் கொலஸ்டாசிஸ் டைப் 3’ என்ற கல்லீரலை தாக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டில் 4 வயதாக இருக்கும்போது உயிரிழந்தார்.

அதன் பிறகு ரசியா என்ற மகள் பிறந்தார். தற்போது இந்த சிறுமிக்கு 4 வயதாகும் நிலையில் அவருக்கும் இந்த அரிய வகையான உயிரை கொல்லும் கல்லீரல் நோய் தாக்கி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்கு 10 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 30 லட்சம்) செலவாகும் என கூறப்பட்டது.

ஏற்கனவே ஒரு மகளை இந்த நோயினால் இழந்த நிலையில், 2-வது மகளுக்கும் அதே நோய் தாக்கியுள்ளதால் மன வேதனை அடைந்தார் இம்ரான் கான். சாதாரண ஊழியரான அவருக்கு இந்த தொகையை திரட்ட கடினமான நிலையாக இருந்தது. உடனே அமீரக அரசின் தொண்டு அமைப்பான செம்பிறை சங்கத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டார். மேலும் அந்த தனியார் மருத்துவமனையும் தங்களது பங்களிப்புக்காக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படும் என அறிவித்தது.

அடுத்ததாக கல்லீரல் தானம் பெறுவதற்கு முயற்சி செய்யப்பட்டது. இதில் கொடையாளராக அந்த சிறுமி ரசியாவின் தந்தையான இம்ரான் கான், மகளின் உயிரை காக்க தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக தர முன்வந்தார். இதையடுத்து, 12 மணி நேர அறுவை சிகிச்சையில் இம்ரான் கானின் கல்லீரலில் இருந்து சிறு பகுதி அகற்றப்பட்டு சிறுமி ரசியாவுக்கு பொருத்தப்பட்டது. அதன் பின் உயிருக்கு பாதிப்பில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு இம்ரான் கான் கூறும்போது, எனது மகளின் கண் நோயால் எப்போதும் மஞ்சளாகவே இருக்கும். இப்போதுதான் தெளிவாக உள்ளதை காண்கிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார். இதுபோன்று உலகில் 1 லட்சத்தில் ஒரு குழந்தைக்கு மரபணு மாற்றத்தால் இந்த நோய் ஏற்படுகிறது என டாக்டர்கள் குறிப்பிட்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.