James Anderson Retirement: டி20, ஓடிஐ, டெஸ்ட் ஆகிய மூன்று பார்மட்களில் வீரர்களுக்கு அதிகம் கடினமாக இருக்கும் பார்மட் எதுவென கிரிக்கெட் ரசிகர்களிடம் நீங்கள் கேட்டால் நிச்சயம் யாரும் யோசிக்காமல் மறுநொடியில் டெஸ்ட் கிரிக்கெட்தான் என்பார்கள். டெஸ்ட் போட்டியை விளையாடுவது என்பது வீரர்களுக்கு கடினம் என்றாலும் ஒரு சிறந்த வீரராக உருவெடுக்க அவர் நிச்சயம் டெஸ்ட் போட்டியில் தனது காலடி தடத்தை பதிக்க வேண்டும்.
அதுவும் இந்த டி20 யுகத்தில் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. தென்னாப்பிரிக்காவின் கிளாசன், குவின்டன் டி காக், ஆப்கானிஸ்தானின் நவீன் உல் ஹக் ஆகியோரை இங்கு குறிப்பிடலாம். அந்த வகையில், 2003ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஒரு நபர் சுமார் 21 ஆண்டுகள் கழித்து இப்போது ஓய்வு பெற உள்ளார்.
701* விக்கெட்டுகள்
அது வேற யாருமில்லை இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்தான். இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இங்கிலாந்து – மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியோடு ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வுபெற இருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். வரும் ஜூலை 30ஆம் தேதியோடு 42 வயதை எட்டும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இது 188ஆவது டெஸ்ட் போட்டியாகும். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து ஆண்டர்சன்தான் உள்ளார்.
188ஆவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் பந்துவீசி 1 விக்கெட்டை கைப்பற்றியிருந்தார் ஆண்டர்சன். இதன்மூலம் தனது டெஸ்டில் மொத்தம் 701 விக்கெட்டுகளை ஆண்டர்சன் கைவசம் வைத்துள்ளார். இன்னும் ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டுமே உள்ளது. இப்படி வேகப்பந்துவீச்சில் இத்தனை விக்கெட்டுகளை வீழ்த்தி ஆண்டர்சன் அசத்தியிருந்தாலும் ஓடிஐ அரங்கிலும் இங்கிலாந்து அணிக்கு அதிக விக்கெட்டுகள வீழ்த்தியவரும் இவர்தான்.
இவர் தான் சிறந்த பேட்டர்…!
தற்போதைய போட்டியுடன் ஆண்டர்சன் விடைபெற இருப்பதால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக கண்ணீர் கடலில் இருக்கின்றனர். இனி ஆண்டர்சன் விராட் கோலிக்கோ, ஸ்டீவ் ஸ்மித்திற்கோ, வில்லியம்சனுக்கோ வீசுவதை பார்க்க முடியாதே என்ற சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஒரு நேர்த்தியான கவிதை போன்ற ஆண்டர்சனின் பௌலிங் ஆக்சனுக்கு யார்தான் அடிமை இல்லை.
இந்நிலையில், தனது ஓய்வை ஒட்டி விளையாட்டுச் சார்ந்த சேனல் ஒன்றில் பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர்,”நான் பந்துவீசியதிலேயே சிறந்த பேட்டர் சச்சின் டெண்டுல்கர்தான்” என்றார். இன்றைய காலகட்டத்தில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் ஆண்டர்சனுக்கு கடுமையாக பதிலடி கொடுத்தாலும் சச்சினையே அவர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
மறக்க முடியாத இன்னிங்ஸ்
இந்திய அணிக்கு எதிராக மட்டும் 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஆண்டர்சன் மொத்தம் 149 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். அதிலும் 9 முறை சச்சினை ஆண்டமிழக்கச் செய்துள்ளார். விராட் கோலி 7 முறையும், ஸ்டீவ் ஸ்மித் 8 முறையும் ஆட்டமிழந்துள்ளனர்.
மேலும் பேசிய ஆண்டர்சன், தான் எதிர்கொண்டதில் மிகக் கடினமான பௌலர்கள் கிளென் மெக்ராத் மற்றும் ஸ்டெயின் ஆகியோர்தான். இருவரின் பந்தையும் அடிப்பது. இருவரும் வெவ்வேறு விதமான பௌலர்கள் என்றும் இருவரும் உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்றார் ஆண்டர்சன். மேலும், 2013இல் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக 81 ரன்களை அடித்ததுதான் தன்னால் மறக்க முடியாத இன்னிங்ஸ் என்றார்.
மேலும் படிக்க | தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீது வைக்கப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!