Indian Cricket Team News Tamil : சாம்பியன்ஸ் டிராபி கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் டாப் 8 இடங்களைப் பிடித்திருக்கும் அணிகள் பங்கேற்க இருக்கின்றன. அதன்படி, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு தகுதி பெறவில்லை. இந்த எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாட இருக்கின்றன.
இதற்கான உத்தேச போட்டி அட்டவணைப் பட்டியலை போட்டியை நடத்தும் பாகிஸ்தான் தயாரித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதனை ஐசிசி பரிசீலித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையில் பங்கேற்பது குறித்த உறுதியை இன்னும் வழங்கவில்லை. ஏன் என்றால் போட்டித் தொடர் பாகிஸ்தானில் நடக்க இருக்கிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி தேவை. 2007 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுடான இருதரப்பு கிரிக்கெட் உறவுகளை நிறுத்திக் கொண்டது. ஐசிசி தொடர்களைத் தவிர இரு அணிகளும் மற்ற போட்டிகளில் விளையாடுவதில்லை.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்வதற்கு இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்காது என தெரிகிறது. இதனை அறிந்து கொண்ட பிசிசிஐ, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தானை தவிர்த்து மற்ற நாடுகளில் நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது. அப்படி நடத்தினால் மட்டுமே இந்திய அணி பங்கேற்கும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் ஐசிசி, இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடக்கும் இடம் முடிவாகும்.
இந்தியாவைத் தவிர மற்ற ஏழு நாடுகளும் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்துவிட்டன. பாகிஸ்தான் அணியும் கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதி நேரத்தில் மட்டுமே பங்கேற்க ஒப்புக்கொண்டது. அத்துடன் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்தியா பாகிஸ்தானுக்கு வரும் என்ற ஒப்புதலைக் கொடுத்தால் மட்டுமே பங்கேற்போம் என தெரிவித்திருந்தது. அதற்கான இசைவை ஐசிசி அப்போது தெரிவித்ததால், அந்த அணி இந்தியாவுக்கு வந்து 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய நிலையில், இப்போது இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல தயார் இல்லை என அறிவித்திருக்கிறது.