மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் சாராயம் தயாரித்ததாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் தயாரித்த சாராயத்தை அருந்திய மூவர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் வசிப்பவர் தேவன். விவசாய தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சியதாகவும், இதனை, தனது விவசாய நிலத்தில் கூலி வேலை செய்யும் மூவருக்கு வழங்கியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சித்தாமூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாராயம் காய்ச்சியதாக கூறப்படும் தேவனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர் தயாரித்த சாராயத்தை அருந்திய மூவரையும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதையடுத்து, அவர்களை சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கள்ளச்சாரயம் அருந்திய 66 பேர் உயிரிழந்ததால், அதுபோல் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக, மேற்கண்ட கிராமப்பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து அனைவரையும் மருத்துவ குழுவினர் பரிசோதித்து வருகின்றனர். மேலும், வருவாய்த்துறையினரும் மழுவங்கரணை கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சித்தாமூர் அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கம் பகுதிகளில் கடந்த ஆண்டு கள்ளச்சந்தையில் மது வாங்கி அருந்திய 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி உள்ளிட்ட நான்கு போலீஸார் அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், மாவட்ட எஸ்பி-யும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, செய்யூர், சித்தாமூர், மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது போலி மதுபானங்கள் மற்றும் அவற்றை விற்பனை செய்த நபர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்த நடவடிக்கைகளை அடுத்து அப்பகுதியில் போலி மதுபானங்கள் விற்பதும் மற்றும் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் கடத்தப்படும் சம்பவங்களும் சற்றே குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இப்பகுதியில் நாட்டுச் சரக்கு என்ற பெயரில் சாராயம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.