தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோவை, கொடிசியா வளாகத்தில் 22-வது சர்வதேச வேளாண் கண்காட்சி (அக்ரி இன்டெக்ஸ் 2024) இன்று தொடங்கியது. இக்கண்காட்சியில் விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.
கொடிசியா வளாகத்தில் விதவிதமான வேளாண் கருவிகளால் அரங்குகள் நிறைந்துள்ளன. முதல் மூன்று அரங்குகளில், வேளாண் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களுக்குத் தேவையான களையெடுக்கும் கருவிகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், ஆளில்லா ட்ரோன்கள் போன்ற அதிநவீன கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கருவிகள் மட்டுமல்லாது டிராக்டர், மினி டிராக்டர், அறுவடை செய்யும் இயந்திரங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இங்கு இந்திய நிறுவனங்கள் மட்டுமல்லாது சீனா, ஜப்பான், சிங்கப்பூர் என பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் தங்களுடைய கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் வைத்திருக்கின்றன.
வேளாண்மை மற்றும் வீட்டுத்தோட்டத்திற்குத் தேவையான செடிகள், நாற்றுகள், காய்கறி விதைகளும், அவற்றை வளர்ப்பதற்குத் தேவையான இயற்கை உரங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
சிறு சிறு தோட்டக் கருவிகள் முதல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வழலைக் கட்டிகள், சாம்புகள், குளியல் பொடிகள் போன்ற காஸ்மெட்டிக் பொருள்களும், வீட்டுக்குத் தேவையான பொருள்களும், தேங்காய் சிரட்டை, வெட்டிவேர் போன்றவற்றைக் கொண்டு செய்யப்பட்ட கைவினைப் பொருள்களும் விற்பனைக்கு இருக்கின்றன. தண்ணீர் இறைக்க பயன்படும் பம்ப்செட் மோட்டார்களும் இடம் பெற்றிருக்கின்றன. மேலும், எளிய முறையில் மதிப்புக்கூட்டு எந்திரங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
போயர் உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகளும், காங்கேயம், கிர், ரத்தி போன்ற பல்வேறு வகையான நாட்டு மாட்டினங்களும் கண்காட்சியில் விற்பனைக்கு இருக்கின்றன.
கண்காட்சியில் நர்சரியும் இடம் பெற்றிருக்கிறது. வாழை, தென்னைப் போன்ற கன்றுகளும், எலுமிச்சை, நாவல் போன்ற மரக்கன்றுகளும், பல வகையான தோட்டச் செடிகளும், மலர் செடிகளும் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் வீடுகளில் அழகுக்காக வைக்கப்படும் அலங்கார செடிகளும், டேபிள் செடிகளும் உள்ளன.
இன்று (ஜூலை 11ம் தேதி) தொடங்கி 15-ம் தேதி 5 நாள்கள் நடைபெறுகின்றன. பார்வையாளர்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சியில் அனுமதிக்கப்படுகிறார்கள். விவசாயம் செய்வோர் மட்டுமின்றி, காஸ்மெட்டிக் பொருட்கள், அழகுச் செடிகள், டேபிள் ஃப்ளார்ஸ் ஆகியவற்றின் மீது நாட்டம் உள்ளவர்களும் கண்டிப்பாக ஒரு விசிட் அடிக்கலாம்.