நாட்டில் நெருக்கடி ஏற்பட்ட போது ஓடி ஒளிந்தவர்கள் இன்று தேர்தல் மேடைகளில் வீர வசனம் பேசுமளவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளதாக வர்த்தக, சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தைரியமாக சவாலை ஏற்று நாட்டை கட்டியெழுப்ப பாடுபட்டதால் நாடு இந்த நிலைக்கு வந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன்,
“கடந்த காலத்தில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த இந்நாடு, தற்போது படிப்படியாக முன்னேறி வருகின்றது. எங்களுக்கு இன்னும் பல சவால்கள் இருக்கின்றன. இந்த சவால்களுக்கு மத்தியில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முடிந்தளவு இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைக் கண்டு வருகிறது. எரிபொருள் வரிசை போன்று கடந்த காலங்களில் காணப்பட்ட பாரிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் கையில் பணமிருந்தாலும் தமக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டது.
இன்று அந்த நிலை மாற்றடைந்துள்ளது. மேலும், பொருகளின் விலைகள் தற்போது ஓரளவு குறைந்துள்ளது. அது இன்னும் குறைய வேண்டும். ஏனென்றால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளது. ஆனாலும் நாடு பொருளாதார ரீதியில் எழுச்சி கண்டு வருகின்றது. அந்தப் பிரச்சினையும் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
அதற்காகத் தான் நாமும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த போது சிலர் நாட்டை விட்டு ஓடினர். இன்னொரு பிரிவினர் குறிப்பாக அரசியல் தலைவர்கள் சிலர் நாட்டிற்குள் ஒளித்துக்கொண்டனர். இன்னும் சில அரசியல் தலைவர்கள் நாட்டைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் துணிச்சலாக முன்வந்து இந்நாடைப் பொறுப்பேற்றார்.
அவ்வாறானதொரு பிரச்சினையான கால கட்டத்தில் நாட்டை விட்டு ஓடியவர்கள், ஒளித்துக்கொண்டவர்கள், பொறுப்பேற்க முன்வராதவர்கள் உள்ளிட்ட இன்னும் சிலர் நாடு பற்றி எரியும்போது, மக்கள் ஒரு பயங்கரமான சூழலில் இருக்கும்போது, தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரினர். குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிப்பது இலகு என்று அவர்களுக்குத் தெரியும். அந்தப் பிரச்சினையை வைத்து தமது அரசியல் இலாபத்தை தேடிக்கொள்வதே அவர்களின் எதிர்பார்ப்பு.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி நாட்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதிலே அதிக கவனம் செலுத்தினார். அவ்வாறு கவனம் செலுத்தியதால் தான் இன்று முடிந்தளவு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளோம். ஒரு இராஜாங்க அமைச்சராக நானும் என்னைப் போன்று ஏனையவர்களும் இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு தம்மால் இயன்றளவு பங்களிப்பு வழங்கியுள்ளோம்.
இன்று அனைவரும் தமது நாளாந்த செயற்பாடுகளை வழமைபோன்று முன்னெடுக்க முடிந்துள்ளது. குறிப்பாக அன்று போராட்டத்தின்போது ஒளிந்துகொண்டவர்களும் இன்று பயமின்றி மேடைகளில் தேர்தலை நடத்துமாறு கோரும் அளவுக்கு நாட்டின் நிலைமை மாறியிருக்கின்றது. ஜனாதிபதியும் அரசாங்கமும் தைரியமாக முன்னெடுத்த வேலைத்திட்டங்களே இதற்குக் காரணம். அதனை யாரும் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. மேலும், மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
மேலும், இந்நாட்டிற்கு குறைந்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்தாலும் கூட, அதைக் கூடிய விலைக்கு விற்கின்ற அல்லது அதிக விலைக்கு விற்பதற்கு விலையைத் தீர்மானிக்கின்ற ஒரு பாரிய மாபியா ஒன்று இருக்கின்றது. இந்த விடயத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றேன். கூட்டுறவுச் சங்கங்கள் நேரடியாக பொருட்களை இறக்குமதி செய்து, சுமார் 03 மில்லியன் அங்கத்தவர்களைக் கொண்ட அவர்களின் வலையமைப்பின் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் போது மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியும்.
உலகில் பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த போது அந்நாட்டின் கூட்டுறவு அமைப்பின் ஊடாகவே குறைந்த விலையில் மக்களுக்கு பொருட்களை விநியோகித்தன. அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளில் கூட்டுறவுக் கட்ட்டைமைப்பு பலமாக இருக்கின்றது. உதாரணமாக, இந்தியாவைக் குறிப்பிடலாம். அங்கு அரசாங்கம் கூட்டுறவு அமைப்பின் ஊடாகவே பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விநியோகிக்கின்றன. எனவே நாமும் அங்குள்ள கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து நேரடியாக இந்நாட்டின் சதொச போன்ற அரச நிறுவனங்கள் பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்தால் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியும். அவ்வாறான பணிகளை ஊக்குவிக்கும் வகையில் நாம் செயற்பட்டு வருகின்றோம்.
மேலும், தற்போது இடம்பெற்று வரும் அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கையைப் பற்றி கூறுவதென்றால், இந்நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முற்றாகப் புறக்கணிக்கவில்லை. அவ்வப்போது வருகின்ற அரசாங்கங்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தி வந்துள்ளன. படிப்படியாக சம்பள அதிகரிப்பும் செய்துள்ளது. தொழிற்சங்கங்களுக்கு போராடுவதற்கு உரிமை இருக்கின்றது. அவர்களின் கோரிக்கைகளில் நியாயமும் இருக்கின்றது.
ஆனாலும் இந்நாடு தற்போது தான் பாரிய வீழ்ச்சியில் இருந்து எழுச்சி கண்டு வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் திடீறென்று எல்லாவற்றையும் சீர்செய்ய முயற்சித்தால் மீண்டும் இந்நாடு அதளபாதாளத்தில் விழுந்துவிடும். ஏற்கனவே இருந்த எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டிருந்தால் இன்று நானும் நீங்களும் இங்கே வந்திருக்க முடியாது. நாடு தற்போது கட்டியெழுப்பபட்டு வருகின்றது. நாம் காலங்காலமாக உற்பத்திப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தாமல், இறக்குமதியை நம்பி பழகிவிட்டோம்.
நாங்கள் விவசாய நாடு என்று கூறிக்கொண்டாலும் இன்னும் அரிசியை இறக்குமதி செய்து வருகின்றோம். தற்போது தான் நாம் படிப்படியாக பொருளாதார ஸ்திர நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றோம். எனவே தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் என்ற அடிப்படையில் ஏற்றுக்கொண்டாலும் கூட அவற்றை எல்லாம் ஒரே இரவில் செயற்படுத்த முடியாது. பணத்தை அச்சடித்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்பட்டதால் தான் நாட்டின் பணவீக்கம் அதிகரித்தது. இந்நாடு மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை நோக்கி செல்லாமால் மிகக் கவனமாக நாம் செயற்பட வேண்டியுள்ளதால் அவர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற முடியும்.
ஒரு வீட்டில் பிரச்சினை ஏற்பட்டால், அவ்வீட்டின் தலைவர் பிள்ளைகளை விட்டு விட்டு ஓடிவிட முடியாது. அவ்வாறு ஓடினால் அவரை வீட்டின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டிற்கும் அவ்வாறுதான். எமக்கும் நன்றி உணர்வு இருக்க வேண்டும். நாம் அனைத்தையும் இலகுவில் மறந்து விடக் கூடாது. இந்நாடு பற்றி எரிந்த நிலையில் நாட்டை விட்டு ஓடிய, நாட்டில் ஒளிந்துகொண்ட மற்றும் நாட்டை பொறுப்பேற்க முன்வராத அரசியல் தலைவர்களுக்கு நாம் ஆதரவு வழங்குவதா? அவர்களும் இப்போது வெளியே வந்து அவர்களை பெரிய வீரர்களாக வீர வசனம் பேசி தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவு வழங்கினால் என்ன நடக்கும்? எனவே இந்நேரத்தில் நாம் நன்றியுடன் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று பொது மக்களும் சிந்திக்க வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துகளுக்கு மாறுபட்ட கருத்தில் நாம் அன்று இருந்தாலும் கூட, தற்போதைய சூழலில் நாட்டை பொறுப்பேற்று பொருளாதார ரீதியில் ஸ்திர நிலைக்கு கொண்டு வந்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுதல் குறித்து ஜனாதிபதி ரணில் விகரமசிங்க இன்னும் உத்தியோகபூர்வமான அறிவிக்கவில்லை. எனவே அவர் அவ்வாறு அறிவித்த பின்னர் எமது நிலைப்பாட்டையும் நாம் அறிவிப்போம்.
மேலும், ஊடகவியலாளர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். இன்று மேடைகளில் வீர வசனம் பேசுகின்றவர்களிடமும், பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக நாட்டில் ஏற்பட்ட போராட்ட கால கட்டத்தில் நாட்டை விட்டு ஓடிய, நாட்டில் ஒளிந்துகொண்ட மற்றும் நாட்டை பொறுப்பேற்க முன்வராத அரசியல் தலைவர்களிடமும் நீங்கள் ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்று கேளுங்கள். அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பதைக் கேட்க பொது மக்கள் போன்று நானும் ஆவலுடன் இருக்கின்றேன்” என்று வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.