‘பிஹார், மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிப்பு’ – ஆர்எஸ்எஸ் கட்டுரையால் சர்ச்சை

புதுடெல்லி: பிஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம் மக்கள் தொகை பெருகுவதாகவும், இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை கைமீறும் என்றும் எச்சரித்து ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் தாய் அமைப்பாக இருப்பது ஆர்எஸ்எஸ். இதன் சார்பில் வெளியாகும் ‘ஆர்கனைஸர்’ ஆங்கில இதழில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. அக்கட்டுரையில், ‘தேசிய அளவில் ஒருங்கிணைந்த மக்கள்தொகை கட்டுப்பாடு தேவை. இந்தியாவின் தென்பகுதி மற்றும் மேற்கு பகுதி மாநிலங்களின் மக்கள் தொகை, ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நிகழும் மாற்றங்களால் மக்களவைத் தேர்தலில் சில தொகுதிகளை இழக்கும் அபாயமும் ஏற்படும்.

தேசிய அளவில் மக்கள் தொகை அளவு சீராக இருப்பினும், சில பிராந்தியங்களில் அது அதிகரிக்கிறது. குறிப்பாக இது, எல்லைப்புற மாநிலங்களின் மாவட்டங்களில் வேகமாக அதிகரிக்கிறது. அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோத ஊடுருவல்களும் நிகழ்கிறது. இதன் காரணமாக, பிஹார், உத்தராகண்ட், அசாம், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இயற்கைக்கு மாறாக முஸ்லிம்களின் பெருக்கம் உள்ளது. பிராந்தியங்களில் சீரான நிலையில் உருவாகும் மாற்றம் மிகவும் முக்கியமானது.



ஏனெனில், இது எதிர்காலத்தில் தொகுதி வரையறை மாற்றங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜனத்தொகை பெருக்கம் என்பது எந்த ஒரு மதம் அல்லது பிராந்தியத்தை பாதிக்காதபடி இருக்க வேண்டும். இந்த நடவடிக்கையின் மீது நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ராகுல் காந்தியை போன்ற தலைவர்கள் அவ்வப்போது, இந்துக்களின் உணர்வுகளை அவமதிக்கிறார்கள். முஸ்லிம்கள் பெருக்கத்தை வைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசியல் செய்வார்.

சனாதனத்தை அவமதிப்பில் திராவிடக் கட்சிகளும் பெருமை கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், இவர்கள் மக்கள்தொகை பெருக்கம் சீராக இல்லாததால் சிறுபான்மை வாக்கு வங்கியை வளர்த்து வைத்துள்ளனர். மக்கள் தொகை விவகாரத்தில் நாம் வெளிநிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஆய்வு நிறுவனங்களின் கருத்தை பொருட்படுத்தக் கூடாது. நம்மிடம் உள்ளவற்றை வைத்து, நாம் தேசிய அளவில் ஒரு சீரானக் கொள்கையை வகுப்பது அவசியம்’ என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.