புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து டெல்லியில் உள்ள அதிகாரபூர்வ அரசு பங்களாவை, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி காலி செய்தார்.
உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியின் முன்னாள் எம்பியும், முன்னாள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சருமான ஸ்மிருதி இரானி, டெல்லியில், 28 துக்ளக் கிரசென்ட் என்ற முகவரியைக் கொண்ட அரசு பங்களாவில் வசித்து வந்தார். இந்நிலையில், அவர் தனது அதிகாரப்பூர்வ அரசு பங்களாவை காலி செய்துவிட்டதாக இன்று (வியாழன்) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் கிஷோரி லால் சர்மா போட்டியிட்டார். இந்தத் தேர்தலில், கிஷோரி லால் சர்மாவிடம் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார்.
புதிய அரசு அமைக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் தங்கள் அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், “ஸ்மிருதி இரானி இந்த வார தொடக்கத்தில் தனது அதிகாரபூர்வ இல்லத்தை காலி செய்தார்” என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.