மதுரை: போதைக்கு அடிமையானவருக்கு மது வாங்கிக் கொடுத்து வெற்றுத்தாளில் கையெழுத்துப் பெற்று புகாராக்கி இருவரை கைது செய்த போலீஸாரை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
நெல்லை மாவட்டம் வெள்ளாங்குளியை சேர்ந்த முருகன் மற்றும் பாபு ஆகியோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில் எங்களை ஜூன் 22-ம் தேதி புது குடியைச் சேர்ந்த நாராயணன் என்பவரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி தங்க செயினை பறிக்க முயன்றதாக வழக்குப் பதிவு செய்து வீரவநல்லூர் போலீஸார் கைது செய்தனர். இது பொய் வழக்கு. எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில், மனுதாரர்கள் மீது நெல்லை மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் ஜாமீன் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், இந்த வழக்கில் புகார் கொடுத்த நபர் மிகவும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர். மது பழக்கம் உள்ளவர். அவருக்கு போலீஸார் ஃபுல் பாட்டில் மது வாங்கி கொடுத்து வெற்றுத்தாட்களில் கையெழுத்து வாங்கி வழக்கு பதிவு செய்துள்ளனர். நாராயணன் நீதிமன்றம் வந்துள்ளார். அவரிடம் விசாரித்து உண்மையை தெரிந்துகொள்ளலாம் என்றார்.பின்னர் நாராயணனிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
நாராயணன் நீதிபதியிடம், எனக்கு போலீஸார் மது வாங்கி கொடுத்து வெற்றுத்தாளில் கையெழுத்து கேட்டனர். கையெழுத்து போடாவிட்டால் அடிப்பதாக மிரட்டினர். இதனால் பயந்துபோய் வெற்றுத்தாட்களில் கையெழுத்திட்டேன். அதன் பிறகு தான் தெரிந்தது நான் புகார் அளித்ததாக கூறி மனுதாரர்களை கைது செய்திருப்பது. இதனால் மிகுந்த வேதனை அடைந்து நீதிமன்றத்துக்கு வந்துள்ளேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்றார். தற்போது சாட்சி சொல்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என்றார்.
இதையடுத்து போலீஸார் மீது அதிருப்தியடைந்த நீதிபதி, போலீஸாரிடம் இவ்வாறு செய்வது சரியா? குற்றவாளி மீது 20 வழக்கு, 30 வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறுவது போலீஸாருக்கு பெருமை தராது. அவப்பெயரைத்தான் தரும். உண்மையான குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் உரிய தண்டனை வாங்கி கொடுத்தால் அவர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட மாட்டார். அவ்வாறு செய்யாமல் பொய் வழக்கு பதிந்து வழக்கு மேல் வழக்கு பதிவு செய்து 20 வழக்கு, முப்பது வழக்கு என்று கூறுவது காவல்துறைக்கு பெருமையா? போலீஸார் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என உத்தரவிட்டார்.