புதுடெல்லி: மணிப்பூரின் நிவாரண முகாம்களுக்கு தான் சென்றது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி தனது மணிப்பூர் பயணம் குறித்து 5 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடனான பதிவில், “மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து நான் இங்கு வருவது இது மூன்றாவது முறை துரதிருஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இன்றும் மாநிலம் இரண்டாக பிரிந்துள்ளது. வீடுகள் எரிகின்றன, அப்பாவி மக்களின் வாழ்க்கை அபாயத்தில் உள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் மணிப்பூருக்கு செல்ல வேண்டும். மக்களின் துயரங்களைக் கேட்டு, மாநிலத்தில் அமைதிக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும். காங்கிரஸ் கட்சியும், இண்டியா கூட்டணியும் மணிப்பூரில் அமைதிக்கான தேவை குறித்து முழு பலத்துடன் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், மணிப்பூரில் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தங்களின் துயரத்தை கூறும் பலருக்கு ஆறுதல் கூறுகிறார் ராகுல் காந்தி. ஜிரிபம் நிவாரண முகாமில் பெண் ஒருவர், தனது பாட்டி இன்னும் கலவரம் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இருப்பதாகவும், அவர் எங்கே இருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மற்றொரு நிவாரண முகாமில், ‘அரசிடம் இருந்து போதிய மருத்துவ உதவிகள் கிடைக்காததால் நான் எனது சகோதரனை இழந்தேன். முகாமில் போதிய மருந்துகள் இல்லை’ என்று தெரிவித்தார். முகாம்களில் மருந்துகள் கிடைக்க காங்கிரஸ் கட்சி உதவி செய்யும் என ராகுல் காந்தி என்று தெரிவித்தார்.
மொய்ராங் நிவாரண முகாமில் பேசிய ராகுல் காந்தி, “நான் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, அழுத்தம் மட்டுமே கொடுக்க முடியும். ஆனால், நீங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்வது குறித்து நான் உறுதி தர முடியாது. ஏனென்றால், அந்தக் கேள்விக்கு அரசுதான் பதிலளிக்க வேண்டும். அடுத்த அமர்வில் நான் உங்களுக்காக பேசுகிறேன்” என்று தெரிவித்தார்.
மணிப்பூர் கலவரம்: மைத்தேயி சமூகத்தினரை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்ற மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் குகி சமூகத்தினர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் இரு சமூகங்களுக்கு இடையில் கலவரம் வெடித்தது. மாநிலம் முழுவதும் பரவிய இந்த கலவரத்தால் 220 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் இன்னும் இனக் கலவரத்தின் பாதிப்பிலிருந்து மீளவில்லை.
मणिपुर में हिंसा शुरू होने के बाद, मैं तीसरी बार यहां आ चुका हूं, मगर अफसोस स्थिति में कोई सुधार नहीं है – आज भी प्रदेश दो टुकड़ों में बंटा हुआ है।
घर जल रहे हैं, मासूम ज़िंदगियां खतरे में हैं और हज़ारों परिवार relief camp में जीवन काटने पर मजबूर हैं।
प्रधानमंत्री को मणिपुर खुद… pic.twitter.com/8EaJ2Tn6v8
— Rahul Gandhi (@RahulGandhi) July 11, 2024