ஸ்ரீவில்லிப்புத்தூர்: வாத்து மேய்ப்பதில் முன்விரோதம்; அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பி!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாத்து மேய்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அண்ணனை, தம்பி கத்தியால் குத்தி கொன்றார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “கூமாப்பட்டி ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் வீரகுரு. இவரின் உறவினர் மகன் வீரபாண்டி. வீரகுருவும்- வீரபாண்டியும் அண்ணன் தம்பிகள் ஆவர். இந்த நிலையில், இவ்விருவரின் குடும்பத்துக்கும் இடையே வாத்து மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

வீரகுரு

இந்நிலையில் இன்று காலையில், அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டு தகராறு நடந்திருக்கிறது. இதில் இருதரப்பிலுமே கத்தி மற்றும் மதுபாட்டிலை உடைத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. உச்சக்கட்ட மோதலில் வீரபாண்டி, உறவுமுறையில் அண்ணன் என்றும் பாராமல் வீரகுருவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த வீரகுருவை மீட்ட அக்கம் பக்கத்தினர், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில், வீரகுருவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த கொலை குறித்து கூமாபட்டி போலீஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பலி

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், மோதலில் பலத்த காயமடைந்த வீரபாண்டி, முதலுதவி சிகிச்சைக்கு பின்பு மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். தொடர்ந்து இதுதொடர்பான புகாரின்பேரில் கூமாப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர். வாத்து மேய்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அண்ணன்-தம்பி இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் அண்ணன் கொலை செய்யப்பட்டது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.