தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும் நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. இத்திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் இம்மாத தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு நாளும் அம்பானி வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இத்திருமண சடங்கிற்கு அரசியல்வாதிகள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தினமும் இரவில் இச்சடங்குகளில் கலந்து கொள்கின்றனர். தனது மகனின் திருமணத்திற்கு முன்பு 50 ஏழை ஜோடிகளுக்கு முகேஷ் அம்பானி இலவச திருமணம் செய்து வைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் கனடா நாட்டுப் பாடகர் ஜஸ்டின் பீபர் கலந்து கொண்டு பாடினார். திருமண சடங்குகள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவு சிவ் சக்தி பூஜை நடந்தது. இப்பூஜையில் முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானி அணிந்து வந்த சேலை மற்றும் அவரது நகைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது.
மணமகள் ராதிகா மெர்ச்சண்ட்டின் பெற்றோர், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே ஆகியோரும் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை அனன்யா பாண்டே ஆகிய இருவரும் அனைத்து சடங்குகளையும் தவறவிடுவதில்லை. சங்கீத் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடனமாடினர். சிவ்சக்தி பூஜைக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளும் நடிகையுமான ஜான்வி கபூர், அவரது காதலர் சிகர், மிஸ் வேல்டு மனுஷி சில்லர், மகேந்திர சிங் தோணி, அவரது மனைவி சாக்ஷி, நடிகர் சஞ்சய் தத், இயக்குநர் அட்லி மற்றும் அவரது மனைவி ஆகியோரும் சிவ் சக்தி பூஜையில் பங்கேற்றனர்.
சிவ்சக்தி பூஜையுடன் மெஹந்தி வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த மெஹந்தி வைக்கும் நிகழ்ச்சியில் மணமகளின் வளர்ப்பு நாயும் கலந்து கொண்டது. நாய்க்குக் குஜராத் முறையில் ஆடை அணிவிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஒட்டு மொத்த திருமணத்திற்கு 320 மில்லியன் டாலர் அளவுக்கு அம்பானி செலவு செய்வதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த அளவுக்கு அதிக செலவு செய்து யாரும் திருமணம் செய்து கொண்டதில்லை.
திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்காக ஐந்து நட்சத்திர விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணச் சடங்குகளில் கலந்து கொண்டு நடனமாடும் நடிகர்கள் முதல் வெளிநாட்டுப் பாடகர்கள் வரை அனைவருக்கும் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்து வருகிறார் அம்பானி. இந்தியாவில் இது போன்ற ஒரு திருமணம் இனி நடக்கக்கூடாது என்ற ரீதியில் முகேஷ் அம்பானி செலவு செய்து வருகிறார். மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ வேல்டு சென்டரில் நாளை திருமணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, 13ம், 14ம் தேதிகளில் திருமணத்திற்குப் பிந்தைய சடங்குகள் நடைபெறுகிறது. இத்திருமணத்தில் கலந்து கொள்ள விருந்தினர்களுக்கு முகேஷ் அம்பானி பிரத்தியேக விமானங்களை இயக்கி வருகிறார்.
திருமணத்திற்கு வி.ஐ.பி.க்களுக்குக் கொடுப்பதற்காகத் தங்க சாமி சிலைகள் இடம்பெற்ற கோயில் வடிவிலான அழைப்பிதழ் தயாரித்து அதனைத் தானே பிரத்தியேகமாகச் சென்று அம்பானி கொடுத்துள்ளார். அல்லது மணமக்கள் நேரில் சென்று கொடுத்தனர். மும்பையில் உள்ள பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் இத்திருமணத்தில் பங்கேற்க இருக்கின்றனர். இத்திருமணத்திற்காக மும்பையில் முக்கிய சாலைகளைப் போக்குவரத்து காவலர்கள் மூடி இருக்கின்றனர்.