மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் பயிற்சி ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக இருந்தவர் பூஜா கேட்கர். இவர் புனேயில் பயிற்சி அதிகாரியாக பணியாற்றியபோது, தனது காரில் சட்டவிரோதமாக சிவப்பு மற்றும் ஊதா விளக்கு மாட்டினார். அதோடு அலுவலகத்தில் தனி அறை, இன்டர்காம் போன், தனி ஊழியர் கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு நெருக்கடி கொடுத்தார். தனது தந்தை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதைக் காரணம் காட்டி, அவர் மூலம் நெருக்கடி கொடுத்தார். இதனால் பூஜா மீது மாவட்ட ஆட்சித்தலைவர் மாநிலத் தலைமை செயலாளரிடம் புகார் செய்தார். இப்புகாரை தொடர்ந்து பூஜா வாசிம் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சர்ச்சையை தொடர்ந்து பூஜாவின் பழைய பிரச்னைகளும் புத்துயிர் பெற ஆரம்பித்துவிட்டது. பூஜா யு.பி.எஸ்.சி தேர்வில் குறைந்த மதிப்பெண்தான் எடுத்திருந்தார். உடனே தான் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி என்றும், சற்று மனநிலை பாதித்தவர் என்றும் குறிப்பிட்டு சிறப்பு ஒதுக்கீட்டில் வேலை பெற்றிருக்கிறார். பூஜா கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் புனேயில் பதவியில் நியமிக்கபட்டார். அவர் அங்கு 2025-ம் ஆண்டு ஜூலை வரை பணியாற்றி இருக்க வேண்டும்.
அவருக்கு வேலை ஒதுக்கப்படும் முன்பு அவர் தெரிவித்த குறைபாடு குறித்து உறுதி செய்து கொள்வதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள மறுத்துவிட்டார். கொரோனா தொற்று இருப்பதாக கூறி மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்தார். அதன் பிறகு அவரிடம் பரிசோதனைக்கு வரும்படி போன் மூலம் அழைப்பு விடுத்த போதும் பூஜா பரிசோதனைக்கு செல்ல மறுத்துவிட்டார். இதனால் நீண்ட இழுபறிக்கு பிறகுதான் அவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள வாசிமில் சென்று பூஜா இன்னும் பணியை ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு சமூக பிரச்னையிலும் குளறுபடி செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பூஜா தன்னை ஓ.பி.சி. கிரீமி லேயர் பிரிவை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பிரிவின் கீழ் சலுகை பெறவேண்டுமானால் வருட வருமானம் 8 லட்சம் ரூபாய் இருக்கவேண்டும். ஆனால் பூஜாவின் தந்தை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியாவார். பூஜாவின் தந்தை திலிப் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார். வேட்பு மனுவில் தனது சொத்து 40 கோடி என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு அவரது தாயார் பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார். எனவே வருமானத்தை குறைத்து காட்டி மோசடி செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பூஜாவிற்கும் 17 கோடிக்கு சொத்து இருப்பதாகவும், அதன் மூலம் வருடத்திற்கு 43 லட்சம் வருமானம் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மாநில தலைமை செயலாளர் சுஜாதா கூறுகையில், “புனே மாவட்ட ஆட்சித்தலைவர் கொடுத்த அறிக்கை அடிப்படையில் பூஜா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் தொடர்பாக எதாவது புகார் செய்வதாக இருந்தால் அது குறித்து மாநில பொது நிர்வாகத்துறையிடம் புகார் செய்யலாம். அத்துறை விசாரிக்கும்” என்று தெரிவித்தார். பூஜா தனது ஆடி காரில் சிவப்பு ஊதா விளக்கு பொருத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், சோசியல் மீடியாவில் பூஜாவின் கார் புகைப்படங்களை பார்த்தேன். அக்காரின் பதிவு குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார். அதோடு பூஜா புனேயில் பயிற்சி அதிகாரியாக சேரும் முன்பு தனக்கு தனி வீடு மற்றும் கார் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்புகார்கள் குறித்து பூஜாவின் தந்தை திலிப் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அடுத்தடுத்து வரும் புகார்களால் பூஜாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb