Unemployment: குஜராத்தில் தனியார் நிறுவன இன்டெர்வியூக்கு முண்டியடித்த இளைஞர்கள்! | Viral Video

உலகில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கும் இந்தியாவில், எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பினரும் நாட்டின் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக முன்வைப்பது `வேலைவாய்ப்பின்மை (Unemployment)’. CMIE ( Centre for Monitoring Indian Economy)-ன் தரவுகளின்படி, 2014-ல் 5.44 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்து 9.2 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

வேலைவாய்ப்பின்மை

குறிப்பாக இதில், கடந்த ஆண்டு ஜுனில் 15.1 சதவிகிதமாக இருந்த பெண்கள் வேலைவாய்ப்பின்மை, இந்த ஆண்டு 18.5 சதவிகிதமாகவும், 7.7 சதவிகிதமாக இருந்த ஆண்கள் வேலைவாய்ப்பின்மை 7.8 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், தொடர்ச்சியாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் குஜராத்தில், தனியார் நிறுவனம் வேலைக்கு ஆள் எடுப்பதாகச் செய்தியறிந்து பிரபல ஹோட்டல் வாயிலில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் முண்டியடித்துக்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்த வீடியோ குறித்து வெளியான தகவலின்படி, குஜராத்தின் தனியார் நிறுவனம் கடந்த செவ்வாயன்று, அங்கலேஷ்வரில் உள்ள ஹோட்டல் லார்ட்ஸ் பிளாசாவில் (Hotel Lords Plaza) தங்கள் நிறுவனத்துக்கு ஆள் எடுப்பதற்காக நேர்காணல் நடத்தியது. அதுவும், சொற்ப அளவிலான எண்ணிக்கையிலேயே இந்த நேர்காணல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த இளைஞர்கள் கூட்டம் கூட்டமாகக் கையில் தங்களின் பயோடேட்டாக்களின் நகல்களை வைத்துக்கொண்டு ஹோட்டலில் ஒரே நேரத்தில் திரண்டனர். பலர் முண்டியடித்துக்கொண்டு உள்ளே செல்ல முயல வெளியில் படிக்கட்டிலிருந்த இரும்பு கைப்பிடி கம்பி சரிந்து சிலர் கீழே விழுந்தனர். இதுதொடர்பான வீடியோவைப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இதுதான் தற்போதைய அரசின் சாதனை என விமர்சித்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.