மதுரையில் வீடுகளுக்கே சென்று வரி வசூலிக்கும் முறை தொடக்கம்: யுபிஐ-க்கும் ஓகே!

மதுரை: மதுரை மாநகராட்சியில் பிஓஎஸ் (POS) கையடக்க இயந்திரம் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் வீட்டுக்கே நேரடியாக சென்று அனைத்து வகையான வரிகளையும் வசூலிக்கும் புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை மாநகராட்சி வரி வசூல் மையங்களிலும், மண்டல அலுவலகங்களிலும் மற்றும் ஆன்லைன் மூலமும் செலுத்தி வருகிறார்கள். சில நேரங்களில் சர்வர் டவுண் ஆவதால் ஆன்லைனில் வரி செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. வரி வசூல் மையங்களிலும் கூட்டம் அதிகமாக உள்ளது. அங்கும் மின் தடை, கணினி பழுது போன்ற காரணங்களால் சில நேரங்களில் வரி செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த சிக்கல்களை சமாளிக்கும் விதமாக மதுரை மாநகராட்சி மற்றும் சிட்டி யூனியன் வங்கி இணைந்து பிஒஎஸ் (POS) என்ற கையடக்க இயந்திரம் மூலம் அனைத்து வரிகளையும் வசூல் செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களை கையுடன் எடுத்துச் செல்லும் பில் கலெக்டர்கள், நேரடியாக வரி செலுத்துவோரின் வீடுகளுக்கே சென்று எளிமையாக வரி வசூல் செய்ய உள்ளார்கள்.



இந்த புதிய முறை வரி வசூல் செய்யும் வசதியை மேயர் இந்திராணி இன்று தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், துணை ஆணையாளர் சரவணன், உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, உதவி ஆணையாளர் (மண்டலம் 2) கோபு, உதவி ஆணையாளர் (வருவாய்) மாரியப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், வருவாய் அலுவலர் ராஜாராம், சிட்டி யூனியன் பேங்க் மதுரை மண்டல மேலாளர்கள் துரை, மதிவாணன், கிளை மேலாளர் கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் இந்திராணி, “முதற்கட்டமாக, இந்த முறையில் பொதுமக்களிடம் வரி வசூல் செய்வதற்கு 100 பிஓஎஸ் கையடக்க இயந்திரங்கள் வரிவசூலிப் பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக வீட்டிற்கே நேரடியாகச் சென்று வசூல் செய்திட மாநகராட்சியின் ஒவ்வொரு வரி வசூலிப்பாளருக்கும் நவீன கையடக்க இயந்திரம் வழங்கப்பட உள்ளது.

இந்த இயந்திரம் மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் யுபிஐ செயலிகள் மூலம் வரி வசூல் செய்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை காலதாமதமின்றி செலுத்தலாம்” என மேயர் இந்திராணி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.