சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அத்துடன் இந்தக் கொலையில் பாஜக வலிந்து தலையிட்டு சிபிஐ விசாரணை கோருவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன், அதன் பிறகு முதல்வரிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, திட்டமிட்டவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியுள்ளோம்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என சில அரசியல் கட்சிகள், சில அமைப்புகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜகவுக்கு இந்த செயல்திட்டம் இருப்பதை அறிய முடிகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கூட அரசியல் செயல்திட்டம் இருப்பதாக விசிக சந்தேகிக்கிறது. அவர் உயிரிழந்த சில நிமிடங்களில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் தான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் வைத்த கோரிக்கை தான் சிபிஐ விசாரணை. காவல்துறை நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாகவே, பகுஜன் சமாஜ் கோரிக்கை வைக்கும் முன்னதாகவே தமிழக அரசு விசாரிக்கக்கூடாது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பது பாஜகவின் குரலாக இருந்தது. அதுவே பாஜக மாநிலத் தலைவரின் குரலாகவும் அடுத்து ஒலித்தது.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்துடன் பாஜகவை சேர்ந்த சிலருக்கு உள்ள தொடர்பு குறித்து கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்படுவதை பார்க்கிறோம். ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பாஜகவில் பொறுப்பிலேயே இருக்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜக வலிந்து தலையிட்டு சிபிஐ விசாரணை கோருகிறது. அவர்களின் அரசியல் செயல்திட்டம் என்பது திமுக அரசுக்கு எதிராக இங்கு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும், ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது.
அதற்குத் துணையாக பல அமைப்புகள் இங்கு செயல்பட்டு வருவதை காண முடிகிறது. இது தொடர்பாக காவல் ஆணையரைச் சந்தித்து நேர்மையான முறையில் விசாரணை நடத்த வலியுறுத்தினோம். முன்னாள் முதல்வர் கருணாநிதியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அரசியல் அநாகரிகத்தின் உச்சமாக இருக்கிறது. தனிப்பட்ட அல்லது அரசியல் விமர்சனங்களை நாகரிகமாக வைக்கலாம். ஆனால் அவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் மேலும் பதற்றத்தை உருவாக்குவதே அவர்கள் நோக்கம் என்பதை உணர முடிகிறது.
எனவே, ஒட்டுமொத்தமாக அரசியல் திட்டங்களை வரையறுத்து கொண்டு சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க சில சக்திகள் செயல்பட்டு வருவதை அறிந்து, சட்டம் – ஒழுங்கை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கிறோம். சட்டம் – ஒழுங்கை சீர்குலைப்போருக்கு அடைக்கலம் தருவோரை கண்காணித்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
இத்துடன் நீட் தேர்வு குறித்தும் குற்றவியல் சட்டங்களை சீராய்வது குறித்தும் மனுக்களை அளித்துள்ளோம். நீட் விவகாரம் தேசிய அளவில் பேசப்படுகிறது. இது தொடர்பாக வரும் 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வரவுள்ள நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
3 குற்றவியல் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர இண்டியா கூட்டணி கட்சி ஆளும் மாநில முதல்வர்களை தமிழக முதல்வர் தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தியுள்ளோம். திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் முன்னெடுத்த போராட்டங்களை எந்தக் கட்சியும் எடுத்திருக்காது. அதை பாராட்ட மனமில்லாதவர்கள் விமர்சிக்கின்றனர். கூட்டணியில் இருந்து கொண்டே போராட்டம் நடத்துவதால் திமுகவினருக்கே எங்கள் மீது வருத்தமுண்டு. பாஜக ஆளும் மாநிலங்களில் பட்டியலினத்தவர்கள் பாதுகாப்பாக உள்ளனரா? நாடு முழுவதும் பட்டியலினத்தவர்கள் காலம் காலமாக பாதிக்கப்படுவது நிதர்சனமான உண்மை. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடாமல் அரசியல் செய்கின்றனர்.” என்று அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது விசிக துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, வன்னியரசு ஆகியோர் உடனிருந்தனர்.