போக்குவரத்துச் சட்டத் திருத்தத்தின் போது ஜி. பி. எஸ் தொழில்நுட்பம், கூகுல் மெப் போன்ற நவீன தொழில்நுட்ப முறைகள் அறிமுகப்படுத்தப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற செய்தியாளர்களுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்துத் தெளிவுபடுத்தி அது தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடலின் போதே ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 1991ஆம் ஆண்டு 37ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நிறுவனம் என்றும் ஒவ்வொரு விதத்திலும் கட்டணம் அறவிடப்படும் போக்குவரத்திற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பாக அரசாங்கத்தின் ஆலோசனைகளுக்கு இணங்க செயற்படுவதாகவும், சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அந்த பஸ்களின் தரம், பயணிக்கும் நேர அட்டவணை, பஸ்களில் காணப்பட வேண்டிய அளவுகோல்கள் என சகலவற்றையும் மேற்பார்வை செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல், இந்நிறுவனத்தினுள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்ட தலைவர், சிசுசெரிய, கெமி செரிய போன்ற அரசாங்கத்தின் ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் விபரித்தார்.
போக்குவரத்து அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் போக்குவரத்து ஆணைக்குழுவின் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு ஆரம்பித்ததாகவும் தற்போது ஆணைக்குழுவிற்கு பஸ்களை ஒழுங்குபடுத்துவதற்கு மாத்திரம் அதிகாரம் உள்ளதாகவும், சட்டத்திருத்தத்தின் போது முற்சக்கர வண்டிகள், டெக்ஸி, பாடசாலை மாணவர்கள் செல்லும் பஸ்கள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவை போன்றவற்றையும் ஒழுங்குபடுத்துவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பூரண அதிகாரம் கிடைக்கும் என்றும் தலைவர் ஷஷி வெல்கம குறிப்பிட்டார்.
இதன்போது, ஏதேனும் பஸ்ஸொன்றை சாலையொன்றிற்கு விடும் போது அதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிபந்தனைகள் காணப்படுவதாகவும், அந்நிபந்தனைகளுக்கு ஏற்றதாக பஸ் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் குளிரூட்டப்பட்ட பஸ், சாதாரண சேவை பஸ் போன்றவற்றை போக்குவரத்திற்கு செலுத்தும் போது அவசியமான விபரங்களுக்கு அமைவாக முழுமையான பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஷெரீன் அதுகோரல வலியுறுத்தினார்.