மதுரை: மதுரை மூன்று மாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டிய கட்டிடங்களை இடிக்க சென்றபோது பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சி, பொதுப் பணித் துறை, வருவாய் துறை அதிகாரிகள், போலீஸார் பாதுகாப்புடன் சென்று அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்றி வருகின்றனர். மதுரை மூன்று மாவடியில் அழகர்கோயில் சாலையில் கட்டிடங்களை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்காக, காலை முதலே அலங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டது.
அந்த பகுதி மக்கள், கட்டிடங்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், பொதுமக்கள் கட்டிடங்களை அகற்றுவதை கைவிட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். ஒரு கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து அங்கிருந்து போலீஸார் மீட்டனர்.
தீயணைப்பு துறையினர், அவர்கள் மீது தண்ணீரை பீச்சியடித்து அப்புறப்படுத்தினர். அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 7 பெண்கள் உள்பட 40 பேரை போலீஸார் கைது செய்தனர். அதன் பிறகு ஆக்கிரமப்பு கட்டிடங்களை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு இடித்து அப்புறப்படுத்தினர்.