ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு வர வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி அழைப்பு விடுத்திருக்கிறார்.
2025-ம் ஆண்டிற்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணையை இறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி. இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தாமல், இலங்கை, துபாயில் நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் பி.சி.சி.ஐ கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
2023-ல் ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. அப்போதும் இந்திய அணி பாகிஸ்தான் செல்வதற்குத் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்திருந்தது. இந்திய அணியின் போட்டிகள் இலங்கையில் மட்டுமே நடந்தன. கடைசியாக இந்திய அணி 2008-ல் பாகிஸ்தானிற்குச் சென்றிருந்தது. அதன் பிறகு எந்த ஒரு போட்டிக்காகவும் அங்கே செல்லவில்லை. இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தானுக்கு விராட் கோலி வர வேண்டும் என முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி அழைப்பு விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், “இந்திய அணியை பாகிஸ்தான் நாட்டிற்கு வரவேற்கிறேன். அரசியலை விளையாட்டுடன் இணைக்கத் தேவையில்லை. 2005-ல் நாங்கள் இந்தியா சென்றிருந்தபோது எங்களை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். விராட் கோலி மட்டும் ஒருமுறை மட்டும் பாகிஸ்தான் வந்தால் இங்குள்ள விருந்தோம்பலைப் பார்த்து அவர் இந்தியாவையே மறந்துவிடுவார்.
பாகிஸ்தானில் விராட் கோலிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவரைக் கொண்டாடி வருகின்றனர். எனக்கும் விராட் கோலி என்றால் ரொம்ப பிடிக்கும். எனவே நாங்கள் விராட் கோலி பாகிஸ்தானில் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறோம். இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு வர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.