Gautam Gambhir : நீங்க சொல்ற எல்லாத்தையுமே ஏத்துக்க முடியாது – கவுதம் கம்பீர் வைத்த கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ

BCCI Rejects Gautam Gambhir’s Request : 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கவுதம் கம்பீர், தனக்கு தேவையான துணை பயிற்சியாளர்கள் மற்றும் குழுவில் இடம்பெற விரும்பும் நபர்களை எல்லாம் பிசிசிஐக்கு பரிந்துரைத்து இருக்கிறார். பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸை நியமிக்க வேண்டும் என்றும் கவுதம் கம்பீர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரிக்கை வைக்க, அது நிராகரிக்கப்பட்டுள்ளது. இருவரும் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஒன்றாக பணிபுரிந்து இருப்பதால் ஜான்டி ரோட்ஸ் வேண்டும் என விரும்பியிருக்கிறார் கவுதம் கம்பீர். ஆனால், இந்திய முன்னாள் வீரர்களை மட்டுமே பயிற்சியாளர்கள் குழுவில் இருக்க வேண்டும் என பிசிசிஐ ஏற்கனவே ஒரு கொள்கை முடிவு எடுத்து வைத்திருக்கிறது. அதன்படி பார்க்கும்போது வெளிநாட்டுக்காரரான ஜான்டி ரோட்ஸ் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற முடியாது.

இதனை பிசிசிஐ, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கவுதம் கம்பீருக்கும் தெரிவித்துவிட்டதாம். ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது கூட இந்தியாவைச் சேர்ந்த பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் ஆகியோர் பணியாற்றி இருந்தனர். அந்த கூட்டணியைப் போலவே கவுதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர் குழுவும் இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது பிசிசிஐ.

அதனால், வேறுவழியின்றி ராகுல் டிராவிட் குழுவில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்த டி திலீப் மீண்டும், அந்த பணியை தொடருவார் என தகவல் வெளியாகியுள்ளது. பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்புக்கு வினய் குமார் பெயரை கவுதம் கம்பீர் பரிந்துரைக்க அதனையும் பிசிசிஐ நிராகரித்துவிட்டதாம், ஜாகீர்கான் உள்ளிட்ட இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பவுலர்கள் சிலரை பயிற்சியாளர் குழுவில் இடம்பெறச் செய்யுமாறு கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளதாம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் அபிஷேக் நாயர் இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கம்பீருடன் பணியாற்றியவர். 

இதேபோல் அவருடன் ஏற்கனவே பணியாற்றிய இந்திய முன்னாள் வீரர்கள் கவுதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர் குழுவில் இடம்பெற இருக்கின்றனர். விரைவில் தங்களின் பயிற்சியாளர் குழுவை அறிவிக்குமாறும் பிசிசிஐ கவுதம் கம்பீரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது. சில பெயர்களை நீக்கியதால் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கும் கம்பீர், தனக்கு ஏதுவாக யாரெல்லாம் இருப்பார்கள் என்ற பட்டியலை இப்போது தயாரித்துக் கொண்டிருக்கிறாராம். அதன்பிறகு அவர்களிடம் கேட்டுக் கொண்டு, அந்த பெயர்களை பிசிசிஐக்கு பரிந்துரைக்க திட்டமிட்டுள்ளாராம். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.