அபுதாபி,
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தை சேர்ந்த முகம்மது பாரூக் என்ற வாலிபர் துபாய்க்கு விசிட் விசாவில் வேலை தேடி வந்துள்ளார். அவர் அபுதாபியில் உள்ள உணவகத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் பணியில் சேர்ந்தார். ஆனால் அவருக்கு உரிமையாளர் சம்பளம் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட வாலிபர் தனது பாஸ்போர்ட்டை திருப்பி தருமாறு கடையின் உரிமையாளரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உணவக உரிமையாளர் பாஸ்போர்ட்டை கொடுக்க மறுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வாலிபர் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாடினார். இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவ உரிமையாளரிடம் பேசி பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றனர். மேலும் அந்த வாலிபர் சொந்த ஊர் செல்ல தேவையான ஆவணங்களை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
அபுதாபியில் இருந்து நேற்று சென்னை செல்வதற்கான விமான டிக்கெட் இந்திய தூதரகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முகம்மது பாரூக் பத்திரமாக சொந்த ஊர் திரும்பினார்.
அமீரகத்திற்கு வேலைக்காக வருபவர்கள் முறையான ஆவணங்களுடன் வரவேண்டும். அப்போதுதான் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.