ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனை ஸ்டோரேஜ் நிரம்பி விடுவதால், போன் இயக்கம் மெதுவாகி விடுவது தான். தற்போது சந்தையில் வரும் ஸ்மார்ட்போன்கள் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி சேமிப்பகத்துடன் வருகின்றன. பயனர்கள் தங்கள் தேவைகள் மற்றும் வேலைகளுக்கு ஏற்ப மாடல்களை தேர்வு செய்கிறார்கள். இதனால் மக்களுக்கு சேமிப்பில் எந்த பிரச்சனையும் இருக்காது. இருப்பினும்,பல சமயங்களில் ஸ்மார்ட்போன்களில் சேமிப்பக சிக்கல்களை எதிர்கொள்வதை நாம் பலமுறை பார்த்திருப்போம்.
ஃபோன் சேமிப்பகம் நிரம்பிய நிலையில், பின்னர் மொபைலில் இடத்தை உருவாக்க, அவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய முக்கியமான தரவை நீக்க வேண்டிய நிலை ஏற்படும். இது ஒரு பொதுவான பிரச்சனை, இது யார் வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம். ஆனால், கூகுள் பிளே ஸ்டோர் டிப்ஸ் உங்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு உங்களுக்கு உதவும். எப்படி என்று சொல்லுவோம்.
கூகுள் ப்ளே ஸ்டோர் ஆப்களை டவுன்லோட் செய்வதற்கு மட்டுமே என்று பலர் நினைக்கிறார்கள். நீங்கள் விரும்பும் செயலியை இங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தான் பலர் நினைக்கிறார்கள். ஆனால், இதற்கு மட்டும் அல்ல.செயலிகளை புதுப்பித்தல் மற்றும் இன்ஸ்டால் செய்தல், நீக்குதல் போன்ற பல வசதிகளை இது பயனர்களுக்கு வழங்குகிறது. இதேபோல், கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆப்களை ஆர்சைவ் செய்யும் வசதியும் உள்ளது. இது போன் சேமிப்பகத்தை சேமிக்கிறது.
பல நேரங்களில் பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் அவர்கள் பயன்படுத்தாத பல செயலிகளை இன்ஸ்டால் செய்யும் வேலையை செய்கிறார்கள். நீங்கள் இந்த செயலிகளைப் பயன்படுத்தாவிட்டாலும், அவை மொபைலில் இருப்பதால் சேமிப்பகத்தைப் பயன்படுத்துகின்றன. இந்தப் செயலிகளை ஆர்சைவ் என்னும் காப்பகப்படுத்துவதற்கான வசதியை Google வழங்குகிறது. கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் சென்று இந்தப் செயலிகளை காப்பகப்படுத்தலாம். இதற்கான செயல்முறையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
செயலிகளை காப்பகப்படுத்துவது எப்படி
1. முதலில் உங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோரை ஓபன் செய்யவும்.
2. பின்னர் முகப்புத் திரையின் மேல் வலது மூலையில் தெரியும் ப்ரொஃபைல் படத்தைக் கிளிக் செய்யவும்.
3. இதற்குப் பிறகு ஒரு பாப்-அப் மெனு திரையில் திறக்கும். இங்கே Settings என்னும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
4. பிறகு ஒரு புதிய பக்கம் திரையில் தோன்றும். இங்கே நீங்கள் மேலே தெரியும் General என்னும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
5. பின்னர் ஒரு புதிய விண்டோ திறக்கும், அங்கு நீங்கள் பல விருப்பங்களைக் காண்பீர்கள்.
6. இங்கே நீங்கள் Automatically Archive Apps என்னும் விருப்பத்தை தேர்ந்தெடுத்து மாற்றலாம்.
கூகிள் ப்ளே ஸ்டோர் செட்டிங்கில் இந்த ஆப்ஷனை ஆன் செய்வதன் மூலம், உங்கள் மொபைலில் இருக்கும் செயலிகளில், நீங்கள் குறைவாகப் பயன்படுத்தும் செயலிகள் காப்பகப்படுத்தப்படும். ஆனால், அந்த அப்ளிகேஷன்களின் தரவு மற்றும் தகவல்கள் சேமிக்கப்படும். தவிர, அந்த செயலிகளின் ஐகான்களும் உங்கள் போனில் தொடர்ந்து தெரியும். அந்த செயலிகளை கிளிக் செய்தால், குறிப்பிட்ட செயலிகள் மீண்டும் இன்ஸ்டால் செய்யப்படும். இது உங்கள் போனின் சேமிப்பகத்தை சேமிக்கும்.