பெய்ஜிங்: ஊழியரை இருட்டு அறையில் பூட்டி வைத்த சீன நிறுவனம் ரூ.44 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குவாங்சோ டுயோய் நெட்வொர்க் நிறுவன ஊழியர் லியுலின்சு. பணி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் இவருக்கும் நிறுவனத்துக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. அந்நிறுவனம், லியுவை தாமாக முன்வந்து வேலையை ராஜினாமா செய்யுமாறு கேட்டுள்ளது. இதற்கு, அவர் மறுக்கவே பணியிடத்தில் உள்ள தனி இருட்டு அறையில் நான்கு நாட்கள் பூட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளது. மொபைல் போனும் அவரிடமிருத்து பறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐந்தாவது நாள் தனது கணவரை காணவில்லை என்று லியுவின் மனைவிகாவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. நிலைமை கைமீறி போவதை உணர்ந்த அந்த நிறுவனம் லியுவை அதிகாரப்பூர்வமாக பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. வேலைநேரத்தில் நிறுவனத்தின் கொள்கைகளை மீறி பல்வேறு மோசமானஇணையதளங்களை பார்ப்பதாகலியுவின் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, இதுதொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், தொழிலாளர் ஒப்பந்த சட்டங்களை மீறி இருட்டு அறையில் அடைத்து வைத்து மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்ததற்காக லியுவுக்கு ரூ.44 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
மேலும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணியிடத்தை முதலாளிகள் உறுதி செய்வது அவசியம் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
இவ்வாறு அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.