கமலா ஹாரிசுடன் தொலைபேசியில் பேசினாரா ராகுல் காந்தி… உண்மை விவரம் என்ன?

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் இருந்து வருகிறார். இந்நிலையில், வருகிற நவம்பரில் அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால், பைடன் போட்டியிடுவதற்கான சாத்தியம் பற்றி கட்சியினரிடையே சர்ச்சை எழுந்துள்ள நிலையில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு அதற்கான வாய்ப்பு பரவலாக உள்ளது என பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை எம்.பி.யான ராகுல் காந்தி தொடர்பு கொண்டு பேசினார் என தகவல் பரவியது.

இதுபற்றி காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் விசுவாசிகள் சிலர் கூறும்போது, கட்சியின் எம்.பி. சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறார் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்றனர்.

எனினும் வேறு சிலர், ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவரானதற்காக அவரிடம் அமெரிக்க துணை ஜனாதிபதி மரியாதைக்காக தொலைபேசியில் பேசியுள்ளார் என்றனர். ஆனால், இது பொய்யான செய்தி என கூறப்படுகிறது.

இதனை அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் அலுவலகம் மறுத்துள்ளது. இதுபோன்று எந்தவித தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அமெரிக்காவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க துணை ஜனாதிபதியின் அலுவலக தகவலின்படி, இந்த செய்தி துல்லியமற்றது. ராகுல் காந்தியுடன், கமலா ஹாரிஸ் பேசவில்லை என்று பதிவிட்டு உள்ளார்.

இந்த தகவலை காங்கிரஸ் கட்சி தரப்பினர் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. எனினும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ராகுலின் முக்கியத்துவங்களை ஊக்குவிக்கும் வகையில், சில சமூக ஊடக கணக்குகள் போலியான செய்திகளை பரப்புவது கேள்விகளை எழுப்புவதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்கான தேவையையும் வலியுறுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.