கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான மக்கள் சந்திப்பு வேலைத்திட்டத்தின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சித் தொடரின் விசேட கூட்டமானது நேற்று (12) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து இவ்விசேட கூட்டம் ஆரம்பமானது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து, மூச்செடுக்க முடியாத நாட்டை படிப்படியாக, மீட்டெடுப்பதற்கு, செலவை குறைத்து வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாகவே அரசாங்கம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் 2042 ஆம் ஆண்டு வரை பணத்தை அச்சடிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்து, அரச ஊழியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். 2019 ஆம் ஆண்டுக்கு முன்னர், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக, அவ்வப்போது பணம் அச்சடிக்கப்பட்டது. ஆனால் இன்று அவ்வாறு செய்ய முடியாது. கடனிலிருந்து நாட்டை முதலில் மீட்க வேண்டும். இதற்காக வருமானத்தை அதிகரித்து அரச செலவுகளை குறைக்க வேண்டும். மக்கள் உயிர் வாழ்வதற்கான, அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அதிகமான நிதியினை செலவு செய்து வருகின்றோம். இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்காக ஏற்படுகின்ற செலவை ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஈடு செய்ய முடியாதுள்ளது. இதுவே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டின் வீதி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் கிழக்கு மாகாணத்திற்கு 1 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம், நாளாந்தம் மாணவர்கள் பயன்படுத்தும் பாடசாலைகளை அண்டிய வீதிகள், விவசாயிகள் பயன்படுத்தும் வீதிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் வீதிகள் என, நாம் மிகவும் அத்தியாவசிய வீதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அபிவிருத்தி செய்து வருகின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் பயணிகளின் பஸ் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். 400 பஸ்களுக்கு 70 எஞ்சின்கள் பெறப்பட்டிருக்கின்றன. இதற்காகவும் கடனை பெறவேண்டிய நிலைக்கே ஆளாகியுள்ளோம் என மேலும் கூறினார்.
இதன்போது கிராமிய வீதிகள், அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துக்கோரள, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜெஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மொறவெவ விமானப்படை முகாம் வீதி திறப்பு , ஸ்ரீகருமாரி அம்மன் வீதி திறப்பு (கன்னியா), மற்றும் இலங்கை போக்குவரத்து சபை திருகோணமலை டிப்போவிற்கு கள விஜயம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.