இந்தியாவில் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக இருப்பது இரு சக்கர வாகனம் தான். வாங்க கூடிய விலை என்பதோடு, போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் ஏற்ற வாகனமாக உள்ளது தான் இதற்கு காரணம். மேலும், அதிக பெட்ரோல் விலையால், பாதுகாப்பு அம்சங்களோடு நல்ல மைலேஜ் கொடுக்கும் பைக்குகள் தான் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக உள்ளது. நல்ல மைலேஜ் கொடுக்கும் பைக்கில் நீங்கள் ஒரு முறை எரிபொருள் டாக்கினை நிரப்பினால் போதும். நீண்ட தூரம் டென்ஷன் இன்றி பயணிக்க முடியும். இந்நிலையில், விலையும் குறைவாக இருக்கும், அதே சமயத்தில் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் பைக்குகளை பற்றி இன்று தெரிந்து கொள்ளலாம்.
பஜாஜ் பிளாட்டினா 110 (Bajaj Platina 110)
பஜாஜ் பிளாட்டினா 110 பைக் லிட்டருக்கு 80.9 கிமீ மைலேஜ் தரும் சிறந்த பைக். இதன் ஆரம்ப விலை ₹71,117 (சென்னை, எக்ஸ்-ஷோரூம்). பிளாட்டினா 110 என்பது விலை குறைவு என்பதோடு நம்பகமான பைக் ஆகும். இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரத்தில் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனமாக உள்ள இந்த பைக், 7.9 பிஎஸ் ஆற்றலையும் 8.4 என்எம் டார்க்கையும் உருவாக்கும் 110சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது.
ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி 125 ( Honda CB Shine SP 12)
ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி 125 பைக் லிட்டருக்கு 74.2 கிமீ மைலேஜ் தருகிறது. இதன் ஆரம்ப விலை ₹68,815 (சென்னை, எக்ஸ்-ஷோரூம்). ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி 125 பைக் அதிக அளவில் விரும்பி வாங்கப்படும் பைக். நல்ல எரிபொருள் திறன் கொண்ட இந்த பைக் வசதியான சவாரிக்கும் பெயர் பெற்ற இந்த பைக்கில் உள்ள 125சிசி இன்ஜின் 9.9 பிஎஸ் பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் உருவாக்குகிறது.
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் (Hero Splendor Plus)
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் லிட்டருக்கு 67.3 கிமீ மைலேஜ் தருகிறது. இதன் ஆரம்ப விலை ₹ 76,456 (சென்னை, எக்ஸ்-ஷோரூம்). இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் அடங்கும். பாதுகாப்பு அம்சம், நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவற்றுக்காக பிரபலமான இந்த பைக், 7.8 பிஎஸ் பவரையும், 8.05 என்எம் டார்க்கையும் உருவாக்கும் 97.2சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது.
டிவிஎஸ் ரேடியான் 125 (TVS Radeon 125)
டிவிஎஸ் ரேடியான் 125 பைக் லிட்டருக்கு 63.8 கிமீ மைலேஜ் தரும். இதன் ஆரம்ப விலை ₹ 74,398 (சென்னை, எக்ஸ்-ஷோரூம்). ரேடியான் 125 ஒரு ஸ்டைலான தோற்றம் கொண்ட மலிவு விலை கம்யூட்டர் பைக் ஆகும், இதனால், தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இளஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள இந்த பைக், 8.7 பிஎஸ் ஆற்றலையும் 10.5 என்எம் டார்க்கையும் உருவாக்கும் 125சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது.
பஜாஜ் சிடி 100 (Bajaj CT 100)
பஜாஜ் CT 100 பைக் லிட்டருக்கு 70.8 கிமீ மைலேஜ் தரும். இதன் ஆரம்ப விலை ₹ 53,869 (சென்னை, எக்ஸ்-ஷோரூம்). பஜாஜ் CT 100 இந்தியாவின் விலை குறைந்த பைக்குகளில் ஒன்றாகும். மலிவான மற்றும் நம்பக தன்மை கொண்ட பைக்கை வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் இந்த பைக், 7.7 பிஎஸ் ஆற்றலையும் 8.4 என்எம் டார்க்கையும் உருவாக்கும் 100சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது.
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், பல்வேறு இணைய தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டவை.