புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு ரூ.58,000 கோடிகடன் வழங்க சர்வதேச செலாவணி நிதியம் ஒப்புதல் அளித்து உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித்தவித்து வருகிறது. இதன்காரணமாக கடந்த 2022-ம் ஆண்டில்இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
கடந்த பிப்ரவரியில் நடந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போது ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த சூழலில் நட்பு நாடுகள்,பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் கடன் பெற்று பொருளாதார நெருக்கடியை புதிய அரசு சமாளித்து வருகிறது.
பாகிஸ்தானின் மக்கள் தொகை சுமார் 25 கோடி ஆகும்.அவர்களில் 22 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டு உள்ளனர். கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
பொருளாதார நெருக்கடியால் ஆயிரக்கணக்கான ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. பாகிஸ்தான் இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வேலையின்றி பரிதவிக்கின்றனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிய சமாளிக்க சர்வதேச செலாவணி நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு கடன் உதவி கோரியது. இதுதொடர்பாக பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதன் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.58,000 கோடி கடன் உதவி வழங்க சர்வதேச செலாவணி நிதியம் நேற்று ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, “உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் உதவி கோரி அலைகிறோம். இதேநிலை நீடித்தால் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவது பெரும் சவாலாக மாறிவிடும். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
சர்வதேச செலாவணி நிதியம் வெளியிட்ட அறிக்கையில், “தற்போது வழங்கும் கடன் உதவி மூலம் பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். அந்த நாடு தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கம்அளிக்க வேண்டும். வரி வருவாயைபெருக்க வேண்டும்.
வர்த்தகம், ஏற்றுமதி, விவசாய துறைகளில் வரி விதிப்பு நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும். ஊழல் தடுப்பு நடைமுறைகளை கடுமையாக்க வேண்டும். பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு கடன் உதவியை வழங்குகிறோம். அவற்றை பாகிஸ்தான் அரசு கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.