மதுரை: பாலியல் தொழில் நடத்த அனுமதி கோரியவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், அந்த நபரின் வழக்கறிஞர் பதிவு மற்றும் அனைத்து கல்விச் சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராயவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜாமுருகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் நாகர்கோவிலில் ‘ஃபிரண்ட்ஸ் ஃபாரெவர் டிரஸ்ட்’ என்ற பெயரில், எண்ணெய் குளியல் சேவை மற்றும் பாலியல் தொழிலாளர்களை கொண்டு டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் சேவைகளை வழங்கி வருகிறேன். என் தொழிலுக்கு போலீஸார் இடையூறு செய்து வருகின்றனர்.
என் முன்னாள் மனைவி, 17 வயது சிறுமி ஒருவரை டிரஸ்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். அந்த சிறுமி வந்த சில நிமிடங்களில் போலீஸாரும் வந்தனர். பாலியல் தொழில் செய்ததாக என்னை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
டிரஸ்ட் சார்பில் பாலியல் தொழிலாளர்களை கொண்டு விரும்பும் நபர்களுக்கு 24 மணி நேரமும் பாலியல் சேவை வழங்கவும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கிளைகள் தொடங்கவும், கடந்த 5 மாதமாக தொழில் முடக்கம் ஏற்பட்டதற்காக எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: சட்டத்தின் நோக்கம் சமூகத்தை பாதுகாப்பதும், சமூகத்தை நல்வழிப்படுத்தி ஒழுங்குபடுத்துவதும் ஆகும். இதனால்தான் வழக்கறிஞர் தொழில் புனிதமானது என்றும், வழக்கறிஞர்கள் சட்டத்தின் பாதுகாவலர்கள் என்றும் கூறப்படுகிறது. சமூக மேம்பாட்டுக்கு சட்டம் முக்கியம். இதில் வழக்கறிஞர்களின் பங்கு முக்கியமானது. இது தவிர சட்டத் தொழில் நீண்ட வரலாறு மற்றும் பொது சேவை கொண்டதாகும்.
இந்த வழக்கில் வழக்கறிஞர் என தன்னைக் கூறிக் கொள்பவர் பாலியல் தொழில் நடத்த அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் கோரி வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது. மனுதாரர் வேலை தேடி வந்த 10-ம் வகுப்பு படித்த சிறுமியின் ஏழ்மையைப் பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.
மாநகராட்சி கவுன்சிலரின் புகாரின்பேரில், மனுதாரர் டிரஸ்டில் போலீஸார் சோதனை நடத்தியபோது, 3 பெண்கள் பாலியல் சேவையில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மனுதாரர் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அடையாள அட்டையை தனது பாலியல் தொழிலுக்கு பாதுகாப்பு கவசமாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.
மனுதாரரின் வழக்கறிஞர் பதிவு மற்றும் சான்றிதழ்களை பார் கவுன்சில் சரிபார்க்க வேண்டும். மனுதாரரின் கல்விச் சான்றிதழ் களின் உண்மை தன்மையையும் ஆராய வேண்டும். பாலியல் தொழில் நடத்துவதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பார்வையுள்ளது. தமிழகத்தில் தடை உள்ளது.
எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனுதாரர் மீதான வழக்கில் போலீஸார் 5 மாதத்தில் விசாரணையை முடித்து, நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மனுதாரர் அபராதத்தை 4 வாரத்தில் குமரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலரிடம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.