பிஹாரில் 4 முறை எம்எல்ஏவாக இருந்த பீமா பார்தியைத் தோற்கடித்து வெற்றியை உறுதி செய்திருக்கிறார் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங். யார் இந்த சங்கர் சிங்? சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றது எப்படி?
பிஹார் மாநிலம் ரூபாலி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைப்பெற்று அதற்கான முடிவுகள் இன்று (ஜூலை 13) அறிவிக்கப்பட்டது. இதில், சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றிருப்பது கவனிக்க வைத்துள்ளது. அங்கு ஐக்கிய ஜனதா தள கட்சி சார்பாகக் கலாதர் பிரசாத் மண்டல், ராஷ்டிர ஜனதா தள கட்சி சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீமா பார்தி ஆகியோர் களத்தில் கடும் போட்டியாளராக இருந்தனர். இப்படியாக சக்தி வாய்ந்த கூட்டணி கட்சி வேட்பாளர்கள் இருந்தும் அவர்களைப் பின்னுக்குத் தள்ளி 8000-க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
யார் இந்த சங்கர் சிங்? – பிப்ரவரி 2005 முதல் நவம்பர் 2005 வரை லோக் ஜனசக்தி கட்சியின் ரூபாலி தொகுதி எம்எல்ஏவாக சங்கர் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இம்முறை ராஷ்டிரா ஜனதா தள கட்சி வேட்பாளராகக் களம் கண்ட பீமா பார்தி, கடந்த 2020-ல், ஐக்கிய ஜனதா தளம் சார்பாகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அந்தத் தேர்தலில் லோக் ஜன சக்தி கட்சி சார்பாகக் களம்கண்ட சங்கர் சிங்கை 19,330 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார் பீமா பார்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் லோக் ஜனசக்தி கட்சியிலிருந்து விலகி, வடக்கு பீகார் விடுதலை இராணுவத்தின் தளபதியாக (North Bihar Liberation Army – Commander) அறியப்பட்டு வருகிறார். அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்கவராகவே சங்கர் சிங் இருக்கிறார். அவரின் அமைப்புப் படுகொலைகள் நடத்துவது, மக்களை அச்சுறுத்துவது போன்ற செயல்களைத் தான் கடந்த காலங்களில் செய்துள்ளது.
தவிர, ரூபாலி சட்டமன்றத் தொகுதி பூர்னியா மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரஞ்சன் அலியாஸ் பப்பு யாதவுக்கு பூர்னியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், சயேச்சை வேட்பாளராகக் களமிறங்கினார் பப்பு யாதவ். ஐக்கிய ஜனதா தளத்தின் சந்தோஷ் குமாரைத் தோற்கடித்து 23,847 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் சுயேட்சையாகக் களமிறங்கிய சங்கர் சிங் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆகவே, இந்தத் தொகுதகள் சுயேச்சைகளுக்கு கைகொடுக்கும் தொகுதியாக மாறியுள்ளது.
கடந்த முறை போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்த சங்கர் சிங் இந்த முறை சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கி தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு அதே தொகுதியில் தற்போது வெற்றியைப் பெற்று கவனத்தை ஈர்த்திருக்கிறார்.