மது என்னும் அரக்கனை ஒழிக்க திருவள்ளுவரில் தொடங்கி 2015-ம் ஆண்டு மதுவை ஒழிக்க தனது உயிரை தியாகம் செய்த சசிபெருமாள் வரை போராடி கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அதை ஒழிக்கத்தான் முடியவில்லை. காரணம், முழுக்க முழுக்க ஊழல் அரசியல்வாதிகளின் வருவாய், அரசின் வருவாய் மற்றும் அதை சார்ந்த அரசியல் மட்டும்தான் என்பதை நாம் உணர வேண்டும்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக மது விற்பனையால்தான், அரசு நடந்து கொண்டு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆளும் கட்சியினருக்கு மதுவின் வருவாய் தேவைப்படுகிறது.
ஆளும் கட்சி எதிர்க்கட்சி ஆகிவிட்டால் மதுவை ஒழிப்போம் என்று குரல் உயர்த்தி கோஷம் போடுவதிலும் குறை வைப்பதில்லை. இந்த சத்தங்களை எல்லாம் கேட்டு தமிழக மக்கள் பழகி போய்விட்டனர். தற்போது, தமிழ்நாட்டில் 5,329 (தற்போது 500 கடைகள் குறைத்திருக்கிறார்கள்) அரசு மதுபான கடைகள் இருந்தபோதிலும், கள்ளச்சாராய விற்பனை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. சமீபத்தில், கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் இறந்து போன அதிர்ச்சி சம்பவம் தமிழகத்திற்கு ஒன்றும் புதிதல்ல.
2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் இறந்தனர். 2008-ம் ஆண்டு தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயம் குடித்து 148 பேர் பலியாகினர். இதில் 41 பேர் தமிழர்கள். சென்ற ஆண்டு 2023, மே மாதம்கூட விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர். இதற்கு முந்தைய காலகட்டத்தில்கூட கள்ளச்சாராயம் என கூறப்படும் விஷ சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. இவை அனைத்தும் தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். அரசியல்வாதிகளுக்குத்தான் சரியாக தெரியவில்லை என்று நினைக்கிறேன்.
எதிர்க் கட்சியாக இருக்கும்போது ஒரு வாய், ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு வாய் என்று மாறி மாறி இருக்கிறார்கள்.
உண்மை நிலைமை என்னவென்றால், ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது கூட, சென்னை மாகாணத்தில் இருந்த 25 மாவட்டங்களில் சேலம், சித்தூர், கடப்பா,
வட ஆற்காடு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும்தான் மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. மற்ற மாவட்டங்களில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாத சூழ்நிலையே இருந்து வந்தது. 1948-ல் ஓமந்தூரார் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகுதான் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடிந்தது. அதுவரை, ராஜாஜி ஆட்சியிலும் கூட தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைபடுத்த முடியவில்லை என்பதுதான் உண்மையான நிலவரம்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, 1971-ம் ஆண்டு கால கட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மாநிலங்களில்கூட மதுவிலக்கு அமல்படுத்தவில்லை. ஆனால், இந்திய அளவில் தமிழகத்திலும், குஜராத்திலும் மட்டும் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது என்பது குறிப்பிடதக்கது. அந்த சமயத்தில் இந்திரா காந்தி மது விலக்கை அமல்படுத்தக்கூடிய மாநிலங்களுக்கு நிதி அதிகமாக ஒதுக்கப்படும் என அறிவித்தார். அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, ‘தமிழகத்தில் மதுவிலக்கு உள்ளது. ஆகவே எங்களுக்கும் நீங்கள் அறிவித்தபடி அதிக நிதியை வழங்குங்கள்’ என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
ஆனால், இந்திரா காந்தி புதிதாக மதுவிலக்கு கொண்டு வரும் மாநிலங்களுக்குத்தான் நிதி வழங்கப்படும். ஏற்கனவே தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருப்பதால் அதிக நிதி வழங்க முடியாது என கூறி மறுப்பு தெரிவித்தார். அதனால், கோவை தி.மு.க பொதுக்குழுவில் மதுவிலக்கு குறித்து முடிவு செய்ய கருணாநிதிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டதுடன், மதுவிலக்கு ரத்து செய்வது எனவும் அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் மக்களின் நலன் கருதி, மதுவின் தீமையை நாட்டு மக்களுக்கு விளக்க, அன்றைய தி.மு.க பொருளாளர் எம்.ஜி.ஆர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பின்னர், இந்த பிரச்னை குறித்து சட்டசபையில் நீண்ட ஒரு விளக்கத்தை கருணாநிதி மன்ற உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் எடுத்து கூறினார்.
அதில்,
‘தமிழகத்தில் நிதி பற்றாக்குறை நிலைமையை போக்க மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு, மத்திய அரசு நம்மை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. தமிழகத்தைச் சுற்றி இருக்கக்கூடிய அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய அனைத்து மாநிலங்களிலும் மதுக்கடைகள் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாட்களுக்குத்தான் தன்னை பாதுகாத்து கொள்ள முடியும்’ என்று அப்போதைய தமிழகத்தின் நிலையை விளக்கினார். பிறகு அரசியல் சூழ்நிலை காரணமாக, 1974-ம் ஆண்டு கருணாநிதியே தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார்.
திமுக கட்சியின் ஆலோசனைபடி, மது ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த எம்.ஜி.ஆர்தான், திமுக ஆட்சி மதுவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி தி.மு.கவிலிருந்து வெளியேறி புதிய கட்சியை துவக்கினார். கட்சியைத் தொடங்கி ஆட்சி பிடித்த எம்ஜிஆர், ‘என் இறுதி மூச்சு இருக்கும் வரை மதுவிலக்கு கொள்கையை நான் நிறைவேற்றுவேன். என்னை பெற்ற அன்னை மீது உறுதி எடுத்து கொள்கிறேன்’ என 2.12.1979 ‘அண்ணா’ நாளிதழின் வாயிலாக சொன்னார். பின்னாளில் அவர் ‘ஆனந்த விகடனில்’ எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்?’ தொடர் கட்டுரையின் வாயிலாக, தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் உள்ளது எனவும், ஆண்டு வாரியாக மது விற்பனை செய்து போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, அதன் விவரங்களையும் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் மது விற்பனையும், மது குடிக்கும் பழக்கத்தையும் அப்புறப்படுத்த முடியாத சூழ்நிலையில், கள்ள சாராயத்தின் வாயிலாக மக்களின் உயிர்களை பலி கொடுப்பதிலிருந்து காப்பாற்ற வேண்டி நல்ல சாராயத்தை அரசே விற்கும் என எம்ஜிஆர் 1981-ல் தமிழகத்தில் மது விலக்கை ரத்து செய்தார். அன்றிலிருந்து திமுக, அதிமுக என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசின் நேரடி பார்வையில் மது விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. 2002-ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின் படி, ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது மலிவு விலை மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
பின்னர் அந்த கடைகளும் 2004-ம் ஆண்டிலிருந்து அரசுடமையாக்கப்பட்டது. அன்று டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு வரக்கூடிய வருவாய் 4 ஆயிரம் கோடியில் தொடங்கி, இன்று 55 ஆயிரம் கோடியில் வந்து நிற்கிறது. இந்த உண்மையை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தெரிந்தும் தெரியாததுபோல் நடிப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. இன்று மது விலக்கு பற்றி பேசும் எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் பழைய வரலாற்றை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
எது எப்படியோ, தமிழகத்தில் உள்ள பல கட்சிகளுடைய நீண்டகால கோரிக்கையாக இருந்து வரக்கூடியது, தமிழகத்தில் கள் கடைகளை திறக்க வேண்டும் என்பதுதான். அதற்கு மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவிக்கக்கூடிய சூழ்நிலையும் உள்ளது. மேலும், இந்த எதிர்பார்ப்பானது 2015-ம் ஆண்டு மதுவிலக்கு போராளி சசிபெருமாள் அவர்கள் இறந்தவுடன் ஏற்பட்ட ஒரு எழுச்சியை போல், தற்போது கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய உயிர் இழப்புகளால், மக்கள் மிகவும் கொதிப்படைந்து இருக்கிறார்கள். அதில், எண்ணெய் ஊற்றுவது போல் எதிர்க்கட்சிகள் நாடகமாடி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், சட்டசபையில் சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பேசிய பேச்சுக்களின் வாயிலாகவும், தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-ல் சட்ட மசோதா திருத்தங்கள் செய்யப்பட்டு அதில், கள்ளச்சாராயம் விற்பனை செய்வோருக்கு 10 லட்சம் அபராதம், அசையும் சொத்துகள் பறிமுதல், ஆயுள் தண்டனை என்று பல அதிரடியான தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, இனி தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மதுவிலக்கு கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்பதையும் மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும், சில கட்சிகள், அரசியல் இயக்கங்கள், விவசாய சங்கங்கள் என பல தரப்பிலிருந்தும் தமிழக அரசிடம் எதிர்பார்க்க கூடியது, ஒரே ஒரு அறிவிப்பை மட்டும்தான். கிராமங்களில் மட்டுமாவது, கள் கடைகளை திறக்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம் கூலி தொழிலாளிகள் குறைந்த செலவில் தங்களுடைய உடல் அசதியை போக்கிக் கொள்ளவும், ஓர் ஆரோக்கியமான பானத்தை பருகி ஆபத்தின் பிடியில் சிக்காமல் உயிர் வாழ்வார்கள். இதோடு பனை மரங்கள் காப்பாற்றபடும், பனைமரச் சாகுபடி பெருகும், பனையை நம்பியுள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
மேலும், கள்ளுக்கடைகள் திறப்பதினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படாத வகையில், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். இதன்படி, கிராமப்புறங்களில் வாழும் மரம் ஏறக்கூடிய தொழிலாளியே கள் இறக்கி விற்பனையும் செய்ய உரிமம் வழங்கலாம். அவருக்கு கிடைக்கக்கூடிய வருவாயில் மரம் வைத்திருக்கக்கூடிய உரிமையாளர்களுக்கும், அரசிற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவரே நேரடியாக செலுத்தும்படி செய்யலாம். இதில், வியாபாரிகள் தலையீடு இருக்க கூடாது. அவர்கள் உள்ளே நுழைந்தால் தான் மரங்களில் இருந்து இறக்க கூடிய கள்ளை சேகரிக்கிறோம் என்ற பெயரிலும், அதை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறோம் என்ற பெயரிலும், அரசு நினைத்து பயப்படக்கூடிய அதிக போதை தரக்கூடிய உயிர் கொல்லிகளை அதில் கலப்படம் செய்து விற்பனை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
மரம் ஏறும் தொழிலாளியே கள்ளை விற்பனை செய்யும்போது ஏதேனும் கலப்படம் இருந்தால், அவரின் உரிமத்தை ரத்து செய்து, மரம் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட கூடாது என்பது போன்ற விதிமுறைகளை கொண்டு வரலாம். இதோடு சிறை தண்டனையும் வழங்கப்படும் என்றும் தண்டனைகளை கடுமையாக்கி உத்தரவிடலாம். இப்படி எல்லாம் சட்ட திட்டங்களை வகுத்து தமிழக அரசு கிராமப்புறங்களில் கள் கடைகளை திறந்து விடுவதன் மூலம், கிராம பகுதியில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான மரம் ஏறும் தொழிலாளிகள் பயனடைவார்கள்.
மேலும், பதநீர் இறக்குதல், கருப்பட்டி தயாரித்தல் என்று பனை சார்ந்த தொழில்களையும் மக்கள் செய்து வருவாய் பெற்று பொருளாதார வளர்ச்சி அடையவும் அரசு வழி வகுத்ததாகவும் இருக்கும். ஆகவே, தமிழக முதல்வர் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்திடவும், உயிர் பலிகள் இல்லாமல் காத்திடவும், வழிவகை செய்வார் என எதிர்பார்க்கிறோம்.
G.பாலகிருஷ்ணன்,
ஒருங்கிணைப்பாளர்,
திருவள்ளூர் மாவட்ட பனை விதை வங்கி.