மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி -நீடா அம்பானியின் இளைய மகன்ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்டுக்கும் நேற்று திருமணம்நடைபெற்றது. இன்று மற்றும்நாளை இரண்டு நாட்களுக்கு திருமண கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன. இந்தத் திருமண நிகழ்வுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முதல்வர்யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உட்படமுக்கிய இந்திய அரசியல் தலைவர்களுக்கும் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி,மாலத்தீவு உட்பட உலக நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
திருமண நிகழ்வில் கலந்துகொள்ள முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்றுமுன்தினமே மும்பை வந்தடைந்தார். பிஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரியஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தன்குடும்பத்தினருடன் பாட்னாவிலிருந்து புறப்பட்டு நேற்று காலைமும்பை வந்தடைந்தார். அதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் மும்பை வந்தடைந்தார்.
திரைப் பிரபலங்கள் ரஜினி காந்த், ஏஆர் ரஹ்மான், கிரிக்கெட் வீரர் தோனி, சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, பாடகர்கள் அடில், லானா டெல் ரே, டிரேக், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், மல்யுத்த வீரர் ஜான் செனா, சவூதி அராம்கோ நிறுவனத்தின் சிஇஓ அமின் நாசர் உள்ளிட்டோர் நேற்றைய திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.