Ambani Wedding Highlights: 2500 வகையான உணவு வகைகள்; ஷாருக் முதல் ரஜினி வரை பங்கேற்ற பிரபலங்கள்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண சடங்குகள் இம்மாத தொடக்கத்தில் தொடங்கி விமரிசையாக நடந்து வந்தன. ஒவ்வொரு நாளும் திருமண சடங்குகளில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு கௌரவித்தனர்.

இந்நிலையில் மும்பை பாந்த்ரா – குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ வேர்ல்டு சென்டரில் நேற்று திருமணம் நடந்தது. இதற்காக அம்பானி வீடு மற்றும் ஜியோ வேர்ல்டு சென்டர் இரண்டுமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அம்பானி இல்லத்திருமணத்திற்கு நேற்று மதியமே விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர். விருந்தினர்களுக்காகச் சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. டெல்லி உட்பட நாட்டின் முக்கிய இடங்களிலிருந்து மும்பைக்குச் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

Anant Ambani – Radhika Wedding

இத்திருமணத்தில் அமெரிக்க டி.வி நட்சத்திரம் கிம் கர்தாஷியன், அவரது சகோதரி கிலோய், நைஜீரியா பாடகி ரீமா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், சாம்சங் நிறுவனத் தலைவர் ஜெய் லி மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஒட்டுமொத்த பாலிவுட்டும் ஆஜராகியிருந்தது. அமிதாப் பச்சன் குடும்பம் மட்டும் இவ்விழாவில் பிரிந்து காணப்பட்டது. அமிதாப் பச்சன், ஜெயாபச்சன், அபிஷேக் பச்சன், ஸ்வேதா நந்தா மற்றும் அவரது கணவர், குழந்தைகள் அனைவரும் திருமணத்தில் கலந்துகொண்டதோடு கூட்டாக போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். ஆனால் இதில் ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் பங்கேற்கவில்லை. இருவரும் தனியாக வந்து திருமணத்தில் பங்கேற்றது மட்டுமல்லாது இருவரும் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

நடிகை ஜான்வி கபூர் தனது காதலர் சிகருடன் இத்திருமணத்தில் கலந்துகொண்டார். ஜான்வி கபூர் அணிந்திருந்த ஆடை அனைவரையும் கவரும் விதத்திலிருந்தது. விழாவில் அனில் கபூரும், போனி கபூரும் ஒன்றாக நடனம் ஆகி மகிழ்ந்தனர்.

Anant Ambani – Radhika Wedding

விழாவில் ரன்வீர் சிங் மற்றும் அனில் கபூர் ஆகியோருடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடனமாடினார். ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பம், சல்மான் கான், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர், ஆலியா பட், வருண் தவான், அர்ஜுன் கபூர், அனன்யா பாண்டே, மகேஷ் பாபு, ராம் சரண், சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, ஸ்ரீகாந்த், ஹர்திக் பாண்டியா உட்பட பாலிவுட் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். ஷாருக்கான் தனது மனைவியோடு ரஜினிகாந்திடம் சென்று கைகூப்பி வணங்கினார். அதோடு அமிதாப் பச்சன் காலை தொட்டு ஷாருக்கான் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இத்திருமணத்தில் பங்கேற்பதற்காக நடிகை கேத்ரீனா கைஃப் லண்டனிலிருந்து வந்து தனது கணவர் விக்கி கௌஷலுடன் சேர்ந்து கலந்து கொண்டார். இது தவிரக் கர்ப்பிணியாக இருக்கும் தீபிகா படுகோனேவும் இத்திருமணத்தில் கலந்து கொண்டார்.

திருமணத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து விருந்தினர்கள் வந்திருந்ததால் அவர்களுக்குத் தகுந்த படி பல்வேறு வகையான உணவு வகைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பனாரஸிலிருந்து பிரத்யேகமாக சாட் மசாலா வரவழைக்கப்பட்டு இருந்தது. இது தவிர இந்தூரில் பிரபலமாக இருக்கும் கராடு சாட் எனப்படும் உணவு வகைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச விருந்தினர்களுக்குச் சமையல் செய்வதற்காக இந்தோனேசியாவிலிருந்து சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். திருமண விருந்தில் தேங்காயில் செய்யப்பட்ட 100 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.

திருமணத்திற்கு முந்தைய சடங்கு

மெட்ராஸ் பில்டர் காபி, கும்பகோணம் டிகிரி காபி, மைசூர் பில்டர் காபியும் விருந்தினர்களிடம் சக்கைப் போடுப் போட்டது. இந்தியத் தெருக்களில் விற்பனை செய்யப்படும் பிரபல உணவு முதல் சர்வதேச உணவு வரை மொத்தம் 2500 வகையான உணவுகள் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன. திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதைச் சாப்பிடுவது என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு உணவு பரிமாறப்பட்டது.

மும்பையில் நேற்று மழை பெய்துகொண்டிருந்தது. அப்படியிருந்தும் திருமண விருந்து களைகட்டிக் காணப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.