“நாங்கள் இன்னும் சிறுவர்கள் கிடையாது, நாங்கள் முதிர்ச்சியடைந்தவர்கள்” என்று டீன் பருவத்தை அடைந்த 13 சிறுவர்கள் ஒரு சாகச பயணத்துக்குத் தயாராகிறார்கள். இதற்காகப் பள்ளியைக் கட்டடித்து வெளியேறும் அவர்களின் பேருந்து பயணம் ஒரு போராட்டத்தால் தடைப்படுகிறது. அதையடுத்து நடைப்பயணமாகக் காட்டுவழியில் செல்ல, அவர்களில் ஒவ்வொருவராக அடுத்தடுத்து காணாமல் போகிறார்கள். காணாமல் போனவர்கள் எங்கே, மற்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், இதையடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பார்த்திபன் ஸ்டைலில் சொல்கிறது இந்த `டீன்ஸ்’.
அந்த பதின்ம பருவத்துக்கு என்ன தேவையோ அதைவிட ஒரு டோஸ் அதிகமான நடிப்பையும், பேச்சையும் வழங்கியிருக்கிறார்கள் 13 நபர்களும். அதில் சாராவாக வரும் கிருத்திகாவும், அபிலாக வரும் பிரங்கின்ஸ்டனும் தனித்துவமாகத் தெரிகிறார்கள். ஆனால், சிறுவர்களின் உடல்மொழியிலிருந்து வசன உச்சரிப்பு வரை எல்லாவற்றிலும் இயக்குநர் பார்த்திபனின் பிரதிபலிப்பே இருப்பது சற்று ஏமாற்றமே! உயிர் உருவாக்கம் – பார்த்திபன் எனப் போட்டுக்கொண்டவர் கதாபாத்திரங்களுக்கு ஏனோ உயிர் கொடுக்கத் தவறிவிட்டார். அழுவது, ஓடுவது, மீண்டும் அழுவது என்று அவர்களுக்கு அதைத் தவிரப் பெரிதாக வேலையில்லை. யோகி பாபு சிரிப்புக்காக இரண்டு இடங்களில் வந்தாலும் சிரிப்புதான் வரவில்லை. இரண்டாம் பாதியில் விஞ்ஞானியாக தலைகாட்டும் பார்த்திபன் தன் வழக்கமான நடிப்பைத் தவிர்த்து அந்தக் கதாபாத்திரத்துக்குத் தேவையானதைச் செய்திருக்கிறார்.
கதை எங்கு நடக்கிறது, என்ன நடக்கிறது என்ற எந்தக் குறிப்பும் இல்லாத சூழலில், பச்சைப் புல்வெளிகள், மரங்கள், புதர்கள் என இருக்கின்ற இடத்தில் வெவ்வேறு கோணங்களைக் காட்டிச் சமாளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கவாமிக் யூ.ஆரி. பரந்த வெளிகள் அடிக்கடி காட்டப்படுவது சிறுவர்கள் மாட்டிக்கொண்டார்கள் என்ற உணர்விலிருந்து நம்மை வெளியேற வைக்கிறது. சிறுவர்கள் காணாமல் போகிறார்கள் என்று தெரிந்த பின்னர் மீண்டும் மீண்டும் சுவாரஸ்யமில்லாமல் ஒரே இடத்துக்குள் சுழலும் காட்சிகளின் நீளத்தைப் படத்தொகுப்பாளர் ஆர்.சுதர்சன் சற்றே கத்திரி போட்டிருக்கலாம். இமானின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசைக்கு ஏற்ப காட்சிகளில் அழுத்தமில்லாததால் அது காட்சிக்குள் ஒட்டாமல் தனியாகத் தெரிகிறது. ரோவர், ஏலியன் ஸ்பேஸ் ஷிப் வருகிற இடங்கள், க்ரீன் மேட் ஷாட்கள் போன்றவற்றில் வரைகலைக்கு இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம்.
சிறுவர்களின் அதிகப்பிரசங்கித்தனமான வசனங்கள், செயற்கைத்தனம் என ஆரம்பமே நம்மைக் கதாபாத்திரங்களை விட்டு விலக வைத்துவிடுகிறது. அதிலும் எதுகை, மோனை, ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் எனக் குழந்தைகள் பேசுவது நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. வீட்டைவிட்டு வெளியேறும் சிறுவர்கள் கள்ளு குடிப்பது, கையை அறுத்துக் கொள்வது, கையை மரத்தில் அடித்து சுயதீங்கு செய்வது போன்ற காட்சிகள் இயக்குநரின் பொறுப்பின்மையையே காட்டுகிறது. ‘குழந்தைகளைக் காணவில்லை’ என்ற பெற்றோர்களின் பதறலையும், காவல்துறையின் தேடுதலையும் மேம்போக்காக இல்லாமல் இன்னும் சுவாரஸ்யத்துடனே காட்சிப்படுத்தியிருக்கலாம். காணாமல் போகும் சிறுவர்கள் போல ஓர் எல்லைக்கு மேல் திரைக்கதையின் சுவாரஸ்யமும் காணாமல் போய்விடுகிறது.
ஆரம்பத்தில் பேய், பிசாசு என்று நகர்ந்த கதை இரண்டாம் பாதியில் எடுக்கும் சயின்ஸ் பிக்ஷன் அவதாரமும் அத்தனை ஆழமாக எழுதப்படவில்லை. ஆடு, மாடு, பறவை எனச் சுற்றிச் சுழலும் அந்த இடைவேளைக் காட்சி சற்றே சுவாரஸ்யம் தந்தாலும் அந்த எதிர்பார்ப்பை இரண்டாம் பாதி தக்க வைக்கத் தவறுகிறது. வானியற்பியலாளராக வரும் பார்த்திபன், வெறும் வசனங்களாலேயே காட்சிகளின் தன்மையை விளக்க ஆரம்பித்துவிடுகிறார். அவர் மட்டுமின்றி, ‘அது வேற மொழியில இருக்கு. அவர்தான் சயின்டிஸ்ட் ஆச்சே, அவர் டிகோட் பண்ணிடுவார்’ என்கிற ரகத்தில் பிற பாத்திரங்களும் விளக்கவுரைகளை அளித்துக்கொண்டே இருக்கின்றனர். க்ளைமாக்ஸில் ‘ஆதரவற்றவன்’ என்பதற்காக ஒரு கதாபாத்திரம் எடுக்கும் அந்த முடிவும் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
புதிய முயற்சிகள் என்றுமே பாராட்டப்பட வேண்டியவைதான், ஆனால் அது ரசிகர்கள் கொடுக்கிற நேரத்துக்கு நியாயம் செய்ய வேண்டியதும் அவசியமாகிறது. அந்த வகையில் சாகசப் பயணம் என்று பதின்ம பருவத்துச் சிறுவர்களை வைத்துப் பின்னப்பட்ட இந்த ‘டீன்ஸ்’ ஒரு போரிங் பயணமாகவே முடிவது ஏமாற்றமே!