ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் எனில், பணக்கார வீட்டில் பிறந்தவராக இருக்க வேண்டும்; பெரிய கல்வி நிறுவனங்களில் படித்துவிட்டு, நுனிநாக்கில் இங்கிலீஷ் பேசுவராக இருக்க வேண்டும் என்கிற மாதிரி பல தவறான அபிப்ராயங்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த அபிப்ராயங்களை உடைத்து, நல்ல தொழில் ஐடியா இருந்தால் போதும், ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கி பட்டையைக் கிளப்பலாம் என்று நிருபித்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த அபிலாஷ்.
25 வயதே ஆன அபிலாஷ் ஃபிக்ஸ்வாட் (Fixwatt Private Limited) என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை மதுரையில் நடத்தி வருகிறார். மிக மிக எளிமையாகத் தொடங்கப்பட்ட இந்த ஃபிக்ஸ்வாட் நிறுவனம், இன்று தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மூலம் ரூ.10 லட்சம் ‘ஃசீட் ஃபண்ட்’ பெற்றதுடன், தமிழகத்தில் நம்பிக்கைகுரிய முறையில் செயல்படும் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.
பல்வேறு வேலைகளுக்கு இடையே பிசியாக இருந்த அபிலாஷை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேசினோம். அவர் தனது பிசினஸ் பயணத்தை நம்முடன் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார்.
ஏழாவது படிக்கும்போதே எலெக்ட்ரிஷியன்…
‘‘என் அப்பா ஒரு எலெக்ட்ரிஷியன்; பிளம்பிங் வேலைகளையும் செய்வார். பிறந்தது முதலே அவர் செய்யும் எலெக்ட்ரிஷியன் வேலைகளைப் பார்த்துப் பார்த்து வளர்ந்தவன் நான். எனவே, எனக்கும் இயற்கையாகவே அதில் ஆர்வம் வந்தது. நான் செளராஷ்ட்ரா பாய்ஸ் ஹைஸ்கூலில் படித்தேன். அப்போதே எலெக்ட்ரிக்கல் வேலைகளை செய்து, புதிது புதிதாக எதையாவது செய்வேன். ஒரு சின்ன பேட்டரியை வைத்து மூன்று மணி நேரத்துக்கு எல்.இ.டி லைட்டை எரிய வைப்பது, கரண்ட் இல்லாதபோது பேட்டரியில் ஒரு ஃபேனை ஓடவைப்பது எனப் பல விஷயங்களை செய்துகொண்டு இருப்பேன். இவற்றை எல்லாம்விட, சைக்கிளில் ஒரு சின்ன மோட்டாரைப் பொருத்தி, அதன்மூலம் சைக்கிளை ஓட்டவும் செய்தேன். அப்போது எல்லோரும் அதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
பள்ளிப்படிப்பைப் படித்து முடித்தவுடன் கே.எல்.என் இன்ஜினியரிங் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் படிப்பை ஆர்வத்துடன் தேர்வு செய்து படித்தேன். கல்லூரியில் நான் படித்தபோது வகுப்பறையில் இருந்து படித்ததைவிட, லேப்பில் இருந்து செய்த சோதனைகள் அதிகம். இப்போது மிகப் பெரும் தொழில்நுட்பமாக இருக்கும் ட்ரோனை நான் 2017-18-ஆம் ஆண்டிலேயே செய்தேன். அது மட்டுமல்லாமல், RFID தொழில்நுட்பம் மூலம் நான்கு சக்கர வாகனங்கள் திருடு போகாமல் இருக்கத் தேவையான ஒரு கண்டுபிடிப்பை செய்து கல்லூரியில் முதல் இடம் பெற்றேன். இதற்கு பேட்டண்ட் ரைட் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். அதற்கு சென்னைக்கு செல்ல வேண்டும். 80 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றார்கள். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. எனவே, பேட்டண்ட் செய்யாமலே இருந்துவிட்டேன்.
இன்ஜினியரிங் படிக்கும்போதே, மதுரையில் உள்ள ஜியோவியோ ஹெல்த்கேர் நிறுவனத்தில் இன்டன்ஷிப் பயிற்சிக்குச் சேர்ந்தேன். அங்கே பல விஷயங்களை என்னால் நிஜத்தில் செய்துபார்க்க முடிந்தது. ஆனால், ஆறு மாதங்களுக்கு மேல் நான் அங்கு வேலை தொடரவில்லை. என் மனம் முழுக்கவுமே சொந்தமாக பிசினஸ் செய்ய வேண்டும் என்பதுதான்.
என் பிசினஸ் நிறுவனத்தைத் தொடங்கினேன்
பிசினஸ் தொடங்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் என்றைக்கு வந்ததோ, அன்றே நான் எலெக்ட்ரிக்கல் வேலை செய்கிற பிசினஸைத்தான் செய்யவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். எலெக்ட்ரிக்கல் வேலையில் மிகப் பெரிய வாய்ப்புகள் இருப்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. இந்த பிசினஸை எப்படி செய்வது என்பது குறித்து யோசித்த போது எனக்குள் ஒரு வித்தியாசமான பிளான் உருவானது.
எலெக்ட்ரிக்கல் வேலை என்பது முறைப்படுத்தப்படாத துறை. எலக்ட்ரிஷியன்களைத் தேடி வேலை வரும். ஒவ்வொரு எலக்ட்ரிஷியனும் ஒவ்வொரு வேலைக்கு ஒவ்வொரு விதமான கட்டணத்தை சொல்வார். வேலையின் தரம் முன்பின் மாறும். வேலைக்கு வரும் நேரம், செய்துமுடிக்கும் நேரம் என எல்லா விஷயங்களும் ஒவ்வொரு எலக்ட்ரிஷியனுக்கும் மாறும். இப்படி இருக்கும் துறையை முறைப்படுத்தப்பட்ட துறையாக மாற்றவேண்டும் என்று முடிவு செய்தேன். வெளிநாட்டில் இருப்பது போல, எலக்ட்ரிஷியன்கள் என்றால் முதலில் அவர்கள் புரபஷனல்கள் என பார்க்கப்பட வேண்டும்; மதிக்கப்பட வேண்டும். அவர்கள் இந்த நேரத்தில் வருவார்கள் என்றால், அந்த நேரத்தில் வந்து அந்த வேலையை செய்துமுடிக்க வேண்டும். இந்த வேலைக்கு இந்தக் கட்டணம் என்று முன்கூட்டியே முடிவாகிவிடுவதால், பேரம் என்கிற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது.
இந்த மாதிரி பல விதிமுறைகளை எனக்குள் வகுத்துக்கொண்டு, அதை செயல்படுத்துகிற மாதிரி ஒரு பிசினஸை செய்ய நினைத்தேன். மதுரையில் எந்தப் பகுதியில் எலெக்ட்ரிக்கல் வேலை இருந்தாலும், அதை செய்துதரும்படி என்னைத் தேடி வருவதற்கு ஒரு இணையதளத்தை உருவாக்கினேன். இணையதளம்மூலம் என்னைத் தொடர்புகொண்டால், நாங்கள் அவரிடம் பேசி, என்ன வேலை, எவ்வளவு கட்டணம் என்பதை எல்லாம் உடனே சொல்லிவிடுவோம். அதற்கு அவர் ஒப்புக்கொண்டால், உடனே எங்கள் எலெக்ட்ரிஷியன்களை அனுப்பி அந்த வேலையை செய்து முடித்துவிடுவோம். இதுதான் நான் செய்ய நினைத்த பிசினஸ்.
நல்ல எலெக்ட்ரிஷியன்களை எடுத்தோம்….
எலெக்ட்ரிக்கல் வேலையை செய்வதற்கு என்னிடம் எலெக்ட்ரிஷியன்கள் யாரும் இல்லை. ஒரு பகுதியில் இருந்து எலெக்ட்ரிக்கல் வேலை வருகிறது என்றால், அந்தப் பகுதியில் உள்ள ஒரு எலெக்ட்ரிஷியன் ஒருவரிடம் அந்த வேலையைத் தருவோம். அவர் அந்த வேலையை செய்துவிட்டால், அவருக்கானக் கட்டணத்தைத் தந்துவிடுவோம். அதாவது, ஓலா, ஊபர் நிறுவனங்கள் டாக்ஸி சர்வீஸ் பிசினஸை நடத்துகிற மாதிரி. இதனை ‘அக்ரிகேட்டர்’ மாடல் என்கிறார்கள். ஆனால், நான் பிசினஸ் தொடங்கியபோது ‘அக்ரிகேட்டர்’ மாடலில் பிசினஸ் செய்கிறேன் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
ஒரு எலெக்ட்ரிஷியன் எனது நிறுவனத்தில் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும் எனில், எந்தக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. அவர்கள் எனக்கு மட்டும்தான் வேலை பார்க்க வேண்டும் என்பதில்லை. ஆனால், நான் சொல்லும் வேலையைத் தாமதிக்காமல், வேலையைக் குறையில்லாமல் செய்துதர வேண்டும் என்பதே நான் போட்ட ஒரே கண்டிஷன்
எனக்குத் தேவையான எலெக்ட்ரிஷியன்களை நான் சேர்க்க ஆரம்பித்தேன். என் அப்பா ஒரு எலெக்ட்ரிஷியன் என்பதால், அவர் மூலம் நம்பகமான, திறமை வாய்ந்த எலெக்ட்ரிஷியன்கள் எனக்குக் கிடைக்க ஆரம்பித்தனர்.
வீட்டுக்குத் தேவையான பேன்கள், விளக்குகள் பொருத்துவது, எலெக்ட்ரிஷியன்கள் தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் சின்னச் சின்ன வேலைகள் எனக்குக் கிடைக்க ஆரம்பித்தன. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே மதுரையை சுற்றி பல பகுதிகளில் இருந்தும் எங்களுக்கு வேலை கிடைக்க ஆரம்பித்தன.
புதிதாக நுழைந்த துறைகள்…
எலெக்ட்ரிக்கல் வேலைகள் என் பிசினஸ் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், அதில் இறங்கிப் பார்த்தபோதுதான் தெரிந்தது, இன்னும் பல வகையான வேலைகளை நான் செய்தே ஆகவேண்டும் என்று. உதாரணமாக, எலெக்ட்ரிக்கல் வேலை செய்யும்போது பிளம்பிங் வேலையும் செய்யவேண்டிய தேவை இருந்தது. பிளம்பிங் வேலை செய்யும்போது, பெயிண்ட் அடித்துத் தரும் வேலையும் வந்துசேர்ந்தது. வீட்டுக்குத் தேவையான வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏசி என எல்லா விதமான ஹோம் அப்ளையன்ஸ்களையும் பொருத்தித் தரும் வேலையையும் எங்களுக்கு வர, அதையும் செய்ய ஆரம்பித்தோம்.
இதை எல்லாம் செய்துகொண்டு இருக்கும்போது டேங்குகளை சுத்தம் செய்வது, மொத்த கட்டடத்தையும் சுத்தப்படுத்தித் தருவது என டீப் கிளினிங் ஒர்க்கும் வந்தது. இவை எல்லாவற்றையும் தாண்டி எலெக்ட்ரானிக்ஸ் துறையில் எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் என்பதால், அந்த வேலையைகளையும் நாங்கள் செய்கிறோம்.
இப்படி நிறைய வேலைகளை நாங்கள் செய்துவந்தாலும், ஒவ்வொரு வேலையையும் மிகத் தரமாக, புரபஷனல் ரீதியாக செய்து தரவேண்டும் என்பதில் நான் எந்த சமரசமும் செய்துகொள்வதில்லை. அதனால்தான், எனது நிறுவனம் அளிக்கும் சேவைக்கு கூகுள் நிறுவனம் 4.9 ரேட்டிங் தந்துள்ளது.
ஆப் மூலம் வரும் ஆர்டர்கள்…
நான் முதலில் இணையதளம் மூலமாகத்தான் வேலைகளைப் பெற ஆரம்பித்தேன். ஆனால், ஆப் மூலம் வேலைகளைப் பெறுவதே சரி என்பதைப் புரிந்துகொண்டபின், 2021-ஆம் ஆண்டு இடையிலேயே ஒரு ஆப்பை உருவாக்கினேன். இப்போது எனக்கு வரும் எல்லா வேலைகளும் ஆப் மூலமே வருகின்றன.
இதனால் எனது நிறுவனத்தின் வருமானம் நன்கு உயர ஆரம்பித்திருக்கிறது. அதாவது, நான் பிசினஸ் தொடங்கிய 2021-ஆம் ஆண்டில் எனக்கு ரூ.5.6 லட்சம் வருமானம் கிடைத்தது. இது 2022-ல் ரூ.15.6 லட்சமாக உயர்ந்தது. 2023-ஆம் ஆண்டு என் நிறுவனத்தின் வருமானம் ரூ.40 லட்சமாக அதிகரித்தது. இந்த 2024-ஆம் ஆண்டில் ரூ.1 கோடி வருமானம் ஈட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறேன். அது மட்டுமல்லாமல், 1500-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெறுவது, 4000-த்துக்கும் மேற்பட்ட சேவைகள் செய்வது, 50-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும் என்கிற இலக்குகளை நிர்ணயித்திருக்கிறோம்.
சீட் ஃபண்டிங் தந்த ஸ்டார்ட் அப் டி.என்
எனக்கு பிசினஸ் செய்வதில் நிறைய ஆர்வம் இருந்ததால், அதை மட்டும் சிறப்பாக செய்துகொண்டு இருந்தேன். ஆனால், நான் இன்னும் சிறப்பாக பிசினஸ் செய்வதற்கு எனக்கு வழிகாட்டுதல் தேவைப்பட்டது. அப்போதுதான் மதுரையில் ‘பூர்ணதா’ அமைப்பின் கெளஷல் சிங் எனக்கு அறிமுகமானார். என் பிசினஸை இன்னும் எப்படி எல்லாம் செம்மைப்படுத்தி நடத்தலாம் என்பதை அவர்தான் எனக்கு சொல்லித் தந்தார்.
தவிர, எனது ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு முதலீடு என்பதால், ஸ்டார்ட் அப் டி.என். (TNStartup) நிறுவனத்தில் சீட் ஃபண்டிங்கிற்கு விண்ணப்பம் செய்தேன். என் விண்ணப்பத்தைப் பரிசீலித்தவர்கள் ரூ.10 லட்சத்தை எனக்கு சீட் ஃபண்ட்-ஆகத் தந்தார்கள். தவிர, தமிழகத்தில் சிறப்பாக நடக்கும் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றாக எனது நிறுவனமும் இருக்கிறது.
இந்த ஆண்டுக்குள் 100 பெரிய நிறுவனங்களை எனது வாடிக்கையாளர்களாக ஆகவேண்டும்; என்னிடம் வேலை செய்கிறவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்த்த வேண்டும் என்கிற இலக்குகளை வைத்து இப்போது வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
எனது இந்த வளர்ச்சியில் நான் மிகப் பெரிய நன்றியை சொல்ல வேண்டும் எனில், என்னிடம் வேலை பார்க்கும் என் பணியாளர்களைத்தான் சொல்வேன். அவர்கள் மிகச் சிறப்பாக வேலை பார்ப்பதால் மட்டுமே ‘ஃபிக்ஸ்வாட்’ நிறுவனத்திற்கு மிகச் சிறப்பான பெயர் கிடைத்திருக்கிறது.
இப்போதைக்கு மதுரையில் மட்டும் நாங்கள் எங்கள் சேவையைத் தந்து வந்தாலும், இனிவரும் காலத்தில் தமிழகம் முழுக்க, ஏன் இந்தியா முழுக்க எங்கள் சேவையைத் தரும் ஒரு நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதும் 1,00,000 புரபஷனல்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும்’’ என்று பேசி முடித்தார் அபிலாஷ்.
மதுரையில் இருந்து இந்தியா முழுக்க செல்ல நினைக்கும் இந்த இளைஞரின் லட்சியம் நிச்சயம் நிறைவேறட்டும்!