வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த காலங்களில் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் மற்றும் பெரிய கட்சிகளை சேர்ந்த அதிபர் வேட்பாளர்கள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதுபற்றி 2008-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவற்றில் அமெரிக்க அதிபர்கள், வேட்பாளர்கள் என நேரடியாக 15 முறை தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில், 5 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் அதிபராக பணியாற்றிய 46 பேரில், 13 பேர் மீது கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில், டிரம்ப் தொடர்புடைய பென்சில்வேனியா துப்பாக்கி சூடு சேர்க்கப்படவில்லை.
இவர்களில் கடந்த காலங்களில் 9 அதிபர்களில் 7 பேர் தாக்குதல்கள் அல்லது கொலை முயற்சியை எதிர்கொண்டிருக்கின்றனர்.
இந்த தாக்குதல்களில் ஜெரால்டு ஆர். போர்டு (1975-ம் ஆண்டில் இரு முறை), ரொனால்டு டபிள்யூ. ரீகன் (1981-ம் ஆண்டில் நடந்த துப்பாக்கி சூடு), பில் கிளிண்டன் (1994-ம் ஆண்டில் வெள்ளை மாளிகையில் துப்பாக்கி சூடு) மற்றும் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் (2005-ம் ஆண்டில் கையெறி குண்டு வீசப்பட்டது. ஆனால் அது வெடிக்கவில்லை) ஆகியோர் உயிர் தப்பினார்கள்.
அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர்களான பராக் ஒபாமா, டொனால்டு டிரம்ப் ஆகியோர் மீதும் தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளன.
1933-ம் ஆண்டில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோன்று, 1912-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் வேட்பாளரான தியோடர் ரூஸ்வெல்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இவர்கள் தவிர, நேரடி தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட 2 அதிபர் வேட்பாளர்கள் ராபர்ட் எப். கென்னடி (1968-ல் படுகொலை) மற்றும் ஜார்ஜ் சி வாலஸ் (1972-ல் காயம்) ஆவர்.
அமெரிக்காவின் 4 அதிபர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் ஆபிரகாம் லிங்கன், ஜேம்ஸ் ஏ கார்பீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எப். கென்னடி ஆகியோர் ஆவர்.
இவை தவிர, அமெரிக்க அதிபராக இருந்த ஹாரி எஸ். ட்ரூமேன் என்பவரின் தற்காலிக இல்லம் மீது 1950-ம் ஆண்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், இதில் சதி திட்டம் நடந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிவரவில்லை.
அமெரிக்காவில் முதன்முறையாக 1835-ம் ஆண்டில் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஆண்ட்ரூ ஜாக்சன் என்பவர் மீது கைத்துப்பாக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும், அதன் குறி தப்பியது. அப்போது தாக்குதல் நடத்தியவர் ரிச்சர்ட் லாரன்ஸ் பைத்தியம் என அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.