திருவள்ளூர்: குத்தம்பாக்கத்தில் ரூ.427 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.427 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தின் பணிகள் தொடர்பாக, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் பி.கே.சேகர் பாபுநேற்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் மூலம், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர் மற்றும் திருப்பதிக்குச் செல்லும் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும். இப்பேருந்து நிலையத்தில் 41 கடைகள் அமைய உள்ளன. ஆம்னி பேருந்துகளுக்கான டிக்கெட் கவுன்ட்டர் அமைக்க 8 கடைகள் ஒதுக்கப்படும். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு உண்டான கழிப்பறைகள், சாய்வு தளங்கள், ஓய்வறைகள், திருநங்கைகளுக்கு தனி கழிப்பறைகள் மற்றும் உணவகங்கள், பாலூட்டும் அறைகள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவை தவிர, 1,811 இருசக்கர வாகனங்கள் மற்றும் 234 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பேருந்து நிலையம் முழுவதுமாக குளிர்சாதன வசதி செய்யப்படும். பேருந்து நிலையத்தின் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இந்த ஆய்வின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தேசிங்கு, மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஜெ.பார்த்தீபன், ஆ.ராஜ்குமார், கண்காணிப்பு பொறியாளர் பா.ராஜ மகேஷ்குமார், செயற்பொறியாளர் பா.விஜயகுமாரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.