“டிஜிட்டல் பரிவர்த்தனை வேஸ்ட், கையில காசு வாங்குறது பெஸ்ட்" – SETC நடத்துநர் குமுறல்; காரணம் என்ன?

பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்கள் தொடங்கி, சிறிய பெட்டிக் கடைகள் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் டிஜிட்டல் உலகில் தற்போது புதிதாக போக்குவரத்துக் கழகமும் நுழைந்துள்ளது.

எஸ்.இ.டி.சி எனப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சமீபத்தில், பணமில்லா பரிவர்த்தனை எனும் டிஜிட்டல் பணப்பரிவத்தனை எனப்படும் கிரெடிட் கார்டு, டெபிட்கார்டு, ஜி பே, போன் பே போன்றவை மூலமும், நடத்துனரிடம் உள்ள க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்வதன் மூலம் கட்டணம் செலுத்தி, பயணச்சீட்டு பெற்று பயணம் செய்யும் நவீன முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன்மூலம், பயணிகள் மற்றும் நடத்துநருக்கு பணிச்சுமை குறைவதுடன், பல்வேறு சில்லரை பிரச்னைகளும் முடிவுக்கு வருமென போக்குவரத்துத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தனியார்ப் பேருந்துகளுக்குச் சவால் விடும் SETC சொகுசு பேருந்துகள் – களமிறங்கும் லீரா!

மேலும் நடத்துநர்களை ஊக்கப்படுத்த, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை செய்து, அதிகளவில் பயணச்சீட்டு விற்பனை செய்யும் நடத்துநருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும் என எஸ்.இ.டி.சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் மோகனிடம் கேட்டபோது, “தமிழகம் முழவதும் 8 போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுகின்றன. இதில் ஒன்றான எஸ்.இ.டி.சி, தற்போது டிஜிட்டல் பணபரிவத்தனை மூலம் பயணச்சீட்டு விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக, இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் மிக அதிகளவில் டிஜிட்டல் முறையில் அதிக பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் நடத்துநருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

இதற்காக எங்களது 22, SETC பணிமனைகளில் இருந்து இயங்கும் அனைத்து பேருந்துகளின் நடத்துநர்களுக்கும் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அன்று ‘பாயின்ட் ஆப் சேல்’ மெஷின் வழங்கப்பட்டது. இதன் மூலம் முதலில் பணத்தை பெற்றுக் கொண்டு, மெஷினில் இருந்து பயணச்சீட்டை கிழித்து கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினோம். தொடர்ந்து, அந்த இயந்திரத்திலேயே க்யூ.ஆர் கோடு ஒட்டப்பட்டது. பயணிகள், அந்த க்யூ.ஆர் கோடு ஸ்கேன் செய்து ஜி பே, போன் பே மூலம் பணம் செலுத்தி, பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். மேலும், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமும் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. இதன் மூலம், பயணிகள் பணத்தை கையில் வைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நடத்துநரும் பெருமளவு பணத்தை கையில் வைத்திருக்க வேண்டியதில்லை. மேலும், பயணிகள், நடத்துநர் இடையே ஏற்படும் சில்லரை பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பில்லை.

உதாரணமாக, நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் பேருந்தில் பணியில் செல்லும் நடத்துநர், மறுநாள் மாலை சென்னையில் கிளம்பி, மீண்டும் நாகர்கோவில் வந்து, தன் கைவசம் உள்ள கிட்டதட்ட லட்ச ரூபாயை பாதுகாப்பாக அலுவலகத்தில் கட்ட வேண்டியுள்ளது. இதனால் நடத்துநர் பணத்தை பாதுகாக்க வேண்டும் என கடும் மன அழுத்தத்தில் இருப்பார். இந்த முறையால் நடத்துநர் இனி நிம்மதியாக பணியாற்றலாம்.

கடந்த 3 மாதத்தில் இந்த திட்டம் நல்ல வெற்றியடைந்திருக்கிறது. ஒரு சிலர் மட்டும்தான் பணம் கொடுத்து பயணச்சீட்டு பெற்று வருகின்றனர். அனைத்து வழித்தடங்களிலும் பெரும்பாலானவர்கள் இந்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறையில்தான் பயணச்சீட்டு பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக, சென்னை – பெங்களூர், மதுரை – பெங்களூர், திருச்சி- பெங்களூர் வழித்தடத்தில் இத்திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. எனவே, இத்திட்டத்தை ஊக்குவிக்கவே, டிஜிட்டல் முறையில் அதிகளவில் பயணச்சீட்டு விற்பனை செய்யும் நடத்துநருக்கும் பரிசு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

ஏற்கெனவே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ‘ஆப்’ மூலமும் முன்பதிவு செய்யலாம். தற்போது, தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தை அனைத்து பேருந்து நிலையங்களிலும் நிறுவி, பயணிகள் அதன் மூலமும் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்” என்றார்.

இத்திட்டத்தின் வெற்றியைப் பார்த்து, இதர போக்குவரத்து கழகங்களான TNSTC, MTC உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து கழகங்களும் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் பரிசோதனை முயற்சியாக இத்திட்டத்தை செயல்படுத்தியும் வருகின்றனர்.

பேருந்து நிலையம்

கள நிலவரம் குறித்து அறிந்து கொள்வதற்காக, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தின் நடத்துநரிடம் இந்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறும் முறை குறித்து கேட்டபோது, பெயரும், புகைப்படமும் வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் அவர் தெரிவித்தது.

“திருநெல்வேலியில் இருந்து எங்களுக்கு அடுத்த ஸ்டேஜ் கோவில்பட்டிதான். திருநெல்வேலியில் ஏறும் ஒரு பயணி, கோவில்பட்டிக்கு டிஜிட்டல் முறையில் என்னிடம் டிக்கெட் வாங்கி விட்டார். அவருக்கு, அவரது வங்கிக் கணக்கில் பணம் கழிந்து விட்டது. எனக்கும் வந்திருக்கும் என்ற நம்பிக்கையில் நானும் இருந்துவிட்டேன். ஆனால், கணக்கு ஒப்படைக்கும்போது, அந்த பணம் கணக்கில் ஏறவில்லை எனத் தெரிய வந்தது. இதனால் வேறு வழியின்றி, நான் என் கையில் இருந்து பணத்தை கொடுத்தேன். இது ஒரு சிறு தொகை என்பதால் பெரிய அளவில் நஷ்டமில்லை.

ஆனால் சில நேரங்களில் நான்கைந்து டிக்கெட் காசை நாங்களே கையில் இருந்து போடும் சூழ்நிலை வந்து விடுகிறது. இது இந்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை முறை மூலம் டிக்கெட் போடும் முறையால்தான் இப்பிரச்னை. முன்பெல்லாம் சுலபமாக காசை வாங்கிக் கொண்டு, டிக்கெட்டை கிழித்து கொடுத்துவிட்டு போய் விடுவோம். ஆனால், இப்போது, பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்தால், அனைவருக்கும் டிக்கெட் கொடுக்க நேரம் ஆகும். பஸ் ஸ்டேண்டில் நின்று கொண்டிருக்கும் வரை டவர் பிரச்னை இருக்காது. ஆனால் நேரம் ஆக ஆக பேருந்து ஊருக்கு வெளியே வந்து விடுவதால், டவர் கிடைக்காமல், நிறைய பணபரிவர்த்தனைகள் நிலுவையில் நிற்கும். இதனால், எங்களுக்கும் பணம் போய் விடுமோ எனப் பதட்டம் அதிகமாகிறது” என்றார்

பேருந்து நிலையம்

அதிகளவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொள்ளும் பேருந்து நடத்துநருக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதே, அது குறித்து உங்கள் கருத்து எனக் கேட்டதற்கு, “தினமும் எங்களுடைய கைக்காசுதான் வீணாகிறது என சொல்கிறேன். இவர்கள் கொடுக்கும் பரிசையும், பாராட்டுச் சான்றிதழையும் வைத்துக் கொண்டு என்ன செய்ய. இது எனது கருத்து மட்டுமல்ல, என்னைப் போல தினசரி ஏராளமான கண்டக்டர்கள் பாதிக்கப்படுகின்றனர்” என வருத்தத்துடன் தெரிவித்தார்.

தனியார் பேருந்துகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை திட்டம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகனிடம் கேட்டபோது, “ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் ஆன்லைனிலேயே புக்கிங் செய்து விடுவார்கள். லைவ் டிக்கெட் எனப்படும் பேருந்தில் ஏறி டிக்கெட் எடுக்கும் நடைமுறை கிடையாது. ஒருவேளை இடையில் யாரேனும் பேருந்தில் ஏறினாலும், பேருந்தில் ஓட்டப்பட்டிருக்கும் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்திய பிறகுதான் பயணிக்க முடியும். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த முறையை நாங்கள் ஏற்கெனவே கொண்டு வந்து, வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.