கோவை,
8வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கோவை முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, நெல்லை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் அருண் கார்த்திக், ஹரிஹரன் களமிறங்கினர். ஹரிஹரன் 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹரிஷ் 29 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய குருசாமி 17 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் அருண் 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் நெல்லை 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அந்த அணியின் சோனு 26 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். கோவை தரப்பில் கேப்டன் ஷாருக் கான், முகமது அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன், சுரேஷ் குமார் களமிறங்கினர். சாய் சுதர்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், பால சுப்ரமணியனுடன் ஜோடி சேர்ந்த சுரேஷ் குமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் கடந்தனர். பால சுப்ரமணியன் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையிடு ஹட் முறையில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய சுரேஷ் குமார் 55 பந்துகளில் 63 குவித்தார். இறுதியில் கோவை 18.3 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நெல்லையை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை அபார வெற்றிபெற்றது.