புதுடெல்லி: துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் பணியாற்றி வருகிறார். ஜம்மு காஷ்மீரி்ல் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநருக்கு அரசு நிர்வாக பணிகள் பலவற்றில் கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை (2019) மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தி புதிய பிரிவுகளை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ‘ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு அலுவல் விதிமுறைகள் (இரண்டாவது திருத்தம்) 2024’ என அழைக்கப்படும். இது கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக அரசு கெஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்ட 2ஏ துணை விதிமுறையின் கீழ் , துணைநிலை ஆளுநரின் விருப்ப உரிமையைப் செயல்படுத்த ‘காவல்துறை’, ‘பொது ஒழுங்கு’, ‘அகில இந்திய சேவை’ மற்றும் ‘ஊழல் தடுப்பு பணியகம்’ தொடர்பாக நிதித் துறையின் முன் ஒப்புதல் தேவைப்படும் எந்தவொரு திட்டமும் தலைமைச் செயலாளர் மூலம் துணைநிலை ஆளுநரின் முன் வைக்க வேண்டும்.இல்லையென்றால் அவற்றை செயல்படுத்த முடியாது.
புதிதாக சேர்க்கப்பட்ட 42ஏ சட்டப்பிரிவின் கீழ், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உதவும் தலைமை வழக்கறிஞர் மற்றும் இதர சட்ட அதிகாரிகள் நியமனத்துக்கான முன்மொழிவுகளுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற, அவற்றை தலைமைச் செயலாளர் மற்றும் முதல்வர் மூலமாக சட்டம்,நீதி, சட்டப்பேரவை விவகாரத்துறை தாக்கல் செய்ய வேண்டும்.
புதிய விதி 42பி பிரிவின் கீழ், ‘‘வழக்கு தொடர்வதற்கான அனுமதி அல்லது மறுப்பு, மேல் முறையீடு தொடர்பான திட்டங்களை, சட்டம், நீதி மற்றும் சட்டப்பேரவை விவகாரத்துறை தலைமைச் செயலர் மூலமாக துணை நிலை ஆளுநரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் சிறைகள், குற்ற வழக்கு இயக்குனரகம், தடய அறிவியல் ஆய்வகம் தொடர்பான விஷயங் களும் தலைமை செயலர் மூலமாக துணைநிலை ஆளுநர் முன் உள்துறை தாக்கல் செய்யும் வகையில் ஜம்மு காஷ்மீர்மறுசீரமைப்பு சட்டத்தின் 43-வது பிரிவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அரசுத் துறை செயலாளர்கள், அகில இந்திய பணி அதிகாரிகளின் நியமனம் மற்றும் பணியிடமாற்றம் தொடர்பான முன்மொழிவுகளும் தலைமை செயலாளர் மூலமாக துணை நிலை ஆளுநர் முன் வைக்க வேண்டும். இந்திய அரசிதழில் வெளியிடப்பட்ட முதன்மை விதிமுறைகளின் கீழ் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நிர்வாக நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும், துணைநிலை ஆளுநரின் விருப்ப உரிமையை உறுதி செய்வதற்காகவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காஷ்மீரில் புதிய அரசு ஆட்சி அமைந்தாலும், அங்கு நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, சட்ட விவகாரம் சுமூகமாக நடைபெற துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.