லக்னோ: 2024 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் அதீத நம்பிக்கை வைத்ததன் காரணமாக பாஜக எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாமல் போனது என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று உத்தரப் பிரதேச மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள், ஊராட்சி தலைவர்கள், மேயர்கள், பாஜக உறுப்பினர்கள் பங்கேற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசி இருந்தார். அப்போது அவர் தெரிவித்தது. இதில் பாஜக தலைவர் நட்டா பங்கேற்றார்.
“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல், 2017 மற்றும் 2022 சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்ததோடு நாம் எதிர்பார்த்த முடிவை பெற்றோம். கடந்த தேர்தல்களை போலவே மாநிலத்தில் வாக்கு சதவீதத்தை 2024 தேர்தலிலும் பெற்றோம்.
அதே நேரத்தில் அதீத நம்பிக்கை வைத்ததன் காரணமாக நாம் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் போனது. இதனால் கடந்த தேர்தல்களில் படுதோல்வி அடைந்த எதிர்க்கட்சிகள் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றன. எதிர்க்கட்சிகளும், வெளிநாட்டினரும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி நமக்கு எதிராக சதி திட்டம் தீட்டினர். அதனால் சமூக வலைதளங்களை பாஜகவினர் கண்காணிக்க வேண்டும். நம் மீது வைக்கப்படும் அபாண்ட குற்றச்சாட்டுகளுக்கு துரிதமாக பதில் தர வேண்டும். பட்டியல் சமூகத்தை சேர்ந்த தலைவர்களுக்கு கட்சி தரும் மரியாதையை சுட்டிக்காட்ட வேண்டும்.
2019-ல் மிகப்பெரிய கூட்டணியை வீழ்த்தி இருந்தோம். எதிர்வரும் 10 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் எம்.பி முதல் கவுன்சிலர் வரை அனைவரும் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும். 2027 சட்டப்பேரவை தேர்தலுக்கான பணியை இப்போது தொடங்க வேண்டும். அதன் மூலம் மீண்டும் பாஜக கொடியை உயர பறக்க செய்ய வேண்டும்” என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.