மும்பை: மகாராஷ்டிராவில் சாலை, ரயில்வே உட்பட ரூ.29,400 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். அதன் பிறகு முதல் முறையாக பிரதமர் நேற்று மகாராஷ்டிர மாநிலத்துக்கு சென்றார்.
மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள நெஸ்கோ கண்காட்சி மையத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலை, ரயில்வே உட்பட ரூ.29,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் முடிவடைந்த சில திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: மகாராஷ்டிராவில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் பயனடைவார்கள். இதன்மூலம் ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மகாராஷ்டிராவுக்கு வளமான வரலாறு, நிகழ்காலம் மற்றும் வலுவான எதிர்காலத்துக்கான கனவு உள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா (விக்சித் பாரத்) இலக்கை எட்டுவதில் மகாராஷ்டிராவுக்கு முக்கிய பங்கு உள்ளது. தொழில், விவசாயம் மற்றும் நிதித் துறையின் சக்தி இங்குதான் உள்ளது. இந்த சக்தி மும்பையை நிதி தலைநகராக மாற்றியுள்ளது. அடுத்தபடியாக மும்பையை நிதி தொழில்நுட்ப (ஃபின்டெக்) தலைநகராக மாற்றுவதே எனது குறிக்கோள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய ரயில்வேயின் கல்யாண் யார்டு மறுவடிவமைப்பு மற்றும் நவி மும்பையில் உள்ள டர்பேயில் கதி சக்தி பன்னோக்கு சரக்கு முனையம் ஆகியவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதுபோல லோக்மான்ய திலக் டெர்மினஸில் புதிய நடைமேடை மற்றும் சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினஸில் விரிவாக்கப்பட்ட 10 மற்றும் 11-வது நடை மேடைகளை திறந்து வைத்தார்.
மேலும் மும்பையில் 2 இரட்டை சுரங்கப்பாதை திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதில் ஒன்று ரூ.16,600 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள தானே-போரிவலி சுரங்கப் பாதை திட்டம் ஆகும். 11.8 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாதை தானே-போரிவலி இடையிலான பயண தூரத்தை 12 கி.மீ. குறைப்பதுடன் ஒரு மணி நேரத்தையும் மிச்சப்படுத்தும். இதை மும்பை மாநகராட்சி வளர்ச்சி ஆணையம் செயல்படுத்தும்.
பிரிஹன் மும்பை மாநகராட்சியின் ரூ.6,300 கோடி மதிப்பிலான கோரேகான் முலுந்த் இணைப்புச் சாலை (ஜிஎம்எல்ஆர்) திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 6.65 கி.மீ. நீளத்துக்கு நிறுவப்பட உள்ள இதன் ஒரு பகுதியாக இரட்டை சுரங்கப்பாதை கட்டப்பட உள்ளது.
மேலும் ரூ.5,600 கோடி மதிப்பிலான முக்யமந்திரி யுவ கார்ய பிரஷிக் ஷன் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 18 முதல் 30 வயதுக்குட்பட்ட வேலையில்லா இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க இந்த திட்டம் வகை செய்கிறது.
இதையடுத்து, மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஜி-பிளாக்கில் உள்ள இந்திய செய்தித்தாள் சங்கத்தின் (ஐஎன்எஸ்) செயலகம் சென்றார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள ஐஎன்எஸ் டவர்ஸ் கட்டிடத்தை திறந்து வைத்தார். ஐஎன்எஸ் அமைப்பின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப நவீன வசதிகளுடன் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.