`மாநில சிறப்பு அந்தஸ்து கிடையாது!' – நிதிஷ், சந்திரபாபு கோரிக்கைக்கு மத்தியில் மத்திய அமைச்சர்

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதில், தனியாக 370 இடங்களுக்கும் மேற்பட்ட இடங்களை இலக்கு வைத்த பாஜக, தனிப்பெரும்பான்மையைக் கூட பெற முடியாமல் 240 இடங்களோடு சுருங்கியது.

மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்

இருப்பினும், கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை 16, 12 இடங்கள் முறையே வென்றதன் மூலம் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. இதனாலேயே, கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் மிக முக்கிய கட்சிகளாகக் கவனிக்கப்படுகிறது.

அதற்கேற்றவாறு, இந்த இருகட்சிகளின் தலைவர்களான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் தங்களின் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடியின் கேபினட்டில் அங்கம் வகிக்கும் பீகாரின் முன்னாள் முதலமைச்சரும், தற்போது மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சி, எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து கிடையாது எனத் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி

ஹாஜிபூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் ஒரே எம்.பி ஜிதன் ராம் மஞ்சி, “நாட்டில் எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதை நிதி ஆயோக் தெளிவாக மறுத்திருக்கிறது. எனவே, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது. அதேசமயம், வளர்ச்சிக்கு எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும், அதை மத்திய அரசும், பிரதமர் மோடியும் வழங்குவார்கள்” என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் இத்தகைய கூற்றால் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரிடமிருந்து எத்தகைய எதிர்வினை வரும் என்பதைப் பொறுத்திருந்துப் பார்க்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.