மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்? கம்பீர் எடுத்துள்ள மிகப்பெரிய ரிஸ்க்!

India vs Srilanka: இந்த மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ராகுல் ட்ராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பங்கு பெரும் முதல் தொடர் இதுவாகும். நீண்ட நாட்களாக அடுத்த தலைமை பயிற்சியாளர் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் சமீபத்தில் ஜெய் ஷா இதனை அறிவித்தார். இந்நிலையில் கம்பீர் தலைமையில் விரைவில் பெரிய அளவில் இந்திய வீரர்களுடன் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கவுதம் கம்பீர் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரை சந்தித்து பேச உள்ளார். இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்ய கம்பீர், அகர்கர் மற்றும் பிற தேர்வாளர் சந்தித்து பேச உள்ளனர்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக அணியில் இடத்தை தவறவிட்டு வரும் ஷ்ரேயாஸ் ஐயர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்கள் ரஞ்சி கோப்பை விளையாட வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்திய நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இதனை பின்பற்றவில்லை. இதனால் கோபமடைந்த பிசிசிஐ இவர்கள் இருவரையும் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்தும் நீக்கியது. அதன் பிறகு இவர்கள் எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் தேர்வு செய்யப்படவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் 2024ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் கம்பேக் கொடுத்தார். அவரது தலைமையில் கேகேஆர் கோப்பையை வென்றுள்ளது.

2024 டி20 உலக கோப்பை அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் இடம் பெறவில்லை. தற்போது கம்பீர் தலைமை பயிற்சியாளர் ஆகியுள்ள நிலையில், ஐயர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது. கடைசியாக டிசம்பர் 2023ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடினார். அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாடினார். இலங்கை சுற்றுப்பயணத்தில் ஐயர் திரும்பினால், அவரது மத்திய ஒப்பந்தத்தை மீண்டும் பெற வாய்ப்புள்ளது. ஒருநாள் போட்டிகளில் ஐயர் இந்திய அணியின் முதுகெலும்பாக இருந்து வருகிறார். விராட் கோலி 3வது இடத்தில் இறங்கிய பிறகு, நம்பர் 4 இடத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் மட்டும் 11 போட்டிகளில் 530 ரன்களைக் குவித்தார்.

இந்திய அணியின் கேப்டன் யார்?

இலங்கை தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது. எனவே இலங்கை தொடரில் கேஎல் ராகுல் ஒருநாள் அணிக்கு கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை அணியில் அவர் இடம்பெறவில்லை. ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பினாலும் உடனடியாக அவருக்கும் கேப்டன்சி கொடுக்க வாய்ப்பில்லை. இதற்கு முன்பு அவர் அணியை வழிநடத்தி இருந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் பிசிசிஐ அவருக்கு கேப்டன் பதவி தராது. மறுபுறம் டி20களில் ஹர்த்க் பாண்டியா அணியை வழிநடத்த உள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக ஹர்திக் சிறப்பாக செயல்பட்டார். மேலும் இனிமேல் டி20 அணியின் முழுநேர கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.