ஒருவர் எவ்வளவுதான் அதிக சம்பளத்தில் வேலை பார்த்தாலும், அவருக்கு அந்த வேலையில் திருப்தி இருந்தால்தான் அதனை அவரால் தொடர்ந்து உற்சாகத்துடன் செய்ய முடியும். எத்தனையோ பேர் அது போன்று பிரபலமான கம்பெனிகளில் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிவிட்டு அதனை விட்டுவிட்டு சொந்த தொழில் செய்து சாதித்துக்கொண்டிருக்கின்றனர்.
இன்றைக்கு யூடியூப்பில் அதிகமானோர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். குஜராத்தை சேர்ந்த நிஷா ஷா என்ற பெண் கடந்த 9 ஆண்டுகளாக லண்டனில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இதன் மூலம் அவருக்கு ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் கிடைத்தது.
ஆனால் அந்த சம்பளம் அவருக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை. ஏற்கெனவே அவருக்கு தெரிந்த நிதி ஆலோசனை தொடர்பாக யூடியூப்பில் ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
ஒரு கட்டத்தில் யூடியூப்பில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்தார். இதனால் வேலையை விடுவது குறித்து பரிசீலித்து வந்த நிஷா ஷா ஒரு கட்டத்தில் அதாவது, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் தனக்கு வருமானம் வரவேண்டும் என்று அவர் விரும்பினார். அவர் ஏற்கெனவே நிதித் துறையில் பிரபலமானவர் என்பதால், நிதி முதலீடு தொடர்பாக மக்களுக்கு ஆலோசனைகளைத் தனது யூடியூப்பில் வீடியோவாக வெளியிட்டார்.
தனி நபர்கள் எதில் முதலீடு செய்யலாம் என்றும், எதில் முதலீடு செய்தால் தொடர்ந்து சம்பாதிக்கலாம் என்பது போன்ற ஆலோசனைகளை நிஷா தனது சேனல் மூலம் வழங்கி வந்தார்.
இது குறித்து நிஷா கூறுகையில்,”நான் யூடியூப் சேனல் ஆரம்பித்து 11 மாதத்தில் ஆயிரம் வாடிக்கையாளர்கள்தான் சேர்ந்தனர். ஆனால் 2022-ம் ஆண்டு நான் வெளியிட்ட ஒரு வீடியோ எனது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஒரு வீடியோ எனக்கு 50 ஆயிரம் வாடிக்கையாளர்களைத் தேடிக்கொடுத்ததுடன் 3 லட்சம் ரூபாய் வருமானத்தையும் கொடுத்தது.
எனவேதான், யூடியூப்பில் முழு கவனம் செலுத்த வேலையை ராஜினாமா செய்தேன். யூடியூப்பில் எப்போது பணம் கிடைக்கும் என்று தெரியாததால், நான் அவசர நிதி ஒன்றை வைத்திருந்தேன். நான் வேலையை ராஜினாமா செய்தபிறகு அந்த நிதிதான் எனக்கு ஒன்பது மாதம் உதவியது.
ஆனால் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்த ஆண்டு மே மாதம் வரை எனக்கு எனது வீடியோ மூலம் யூடியூப்பில் ரூ.8 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. சொந்தமாக நிதி தொடர்பாக வகுப்புகளும் எடுக்கிறேன். கார்ப்ரேட் நிறுவனங்களுக்காக உரையாற்றுவது என்று யூடியூப்பில் பல்வேறு வழியில் இந்த வருமானம் கிடைக்கிறது.
நான் வேலை செய்த போது கிடைப்பதைவிட இப்போது எனக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இனி பணத்தைத் துரத்தாமல், நான் நல்லதை, நான் விரும்புவதையும், நான் ரசிப்பதையும் செய்வதன் மூலம், நான் முன்பு இருந்த அனைத்தையும் மிஞ்ச முடிந்தது”என்றார்.
மோசமான நிதிப் பழக்கம் ஒருவரை எப்படி ஏழையாக வைத்திருக்கிறது என்பது குறித்தும், எந்தெந்த எந்த வகையில் சிறப்பாக முதலீடு செய்யலாம் என்பது குறித்த வீடியோக்கள் யூடியூப்பில் அதிக அளவில் மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது.
நிஷாவின் வீடியோவை சராசரியாக ஒரு லட்சத்தில் இருந்து 9 மில்லியன் பேர் பார்க்கின்றனர். நிஷா கொடுக்கும் நிதி ஆலோசனைகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. 2021ம் ஆண்டு யூடியூப் சேனல் ஆரம்பித்த நிஷாவிற்கு இப்போது ஒரு மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.