LIVE ”இந்தாம்மா ஏய்” நடிகர் மாரிமுத்துவுக்கு Television Talk of the year விருது! ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023

சிறந்த ரியாலிட்டி ஷோ – சரிகமபா

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023: `ஃபேவரைட் ரியாலிட்டி ஷோ விருதை’ ஜீ தமிழ் தொலைக்காட்சியின் `சரிகமப’ நிகழ்ச்சிக்கு இயக்குநர் மிஷ்கின் வழங்க, அந்த நிகழ்ச்சியின் குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

“அரசியல் பேசுகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல், பெரிய அரசியலை இந்த ஷோ அழுத்தமாகச் செய்கிறது. இசை என்பது கலையின் முதல் வடிவம். ஒரு செருப்பு தைக்கும் நபரின் மகன் பாடுகிறார். அதை அவர் தந்தை வெளியில் நின்று பார்க்கிறார் என்பது மிகப்பெரிய விஷயம். இந்த ரியாலிட்டி ஷோ இன்னும் அதிக சீஸன்களைக் கடந்து செல்ல வேண்டும் என்பது என் ஆசை.’’ – இயக்குநர் மிஷ்கின்.

“சாமானியர்கள் தங்கள் திறமையைக் காட்டுவதே இந்தத் தொடரின் இதயம் என்று சொல்லலாம். ஏழு வீடுகளில் வீட்டு வேலைசெய்யும் அம்மா, எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடுவது, ஆட்டோ டிரைவர் தன் வேலையை முடித்துவிட்டு பாட்டுப் பாடுவது என்று சாமானியர்களின் வெற்றிதான் எங்கள் மேடை.’’ – பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாஸ்.

`Face of Tamil Television’ கோபிநாத்

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023: `Face of Tamil Television’ விருதை சின்ன ராஜு, பாலா ஆகியோர் வழங்க, `நீயா நானா’ கோபிநாத் பெற்றுக்கொண்டார்.

“விகடனில் இதுவரை நான் ஆறு விருதுகள் வாங்கியிருக்கிறேன். நான் இந்த விருதை எனக்குப் பின்னால் வேலைசெய்யும் என்னுடைய பெரிய குழுவுக்குச் சமர்ப்பிக்கிறேன். எனக்கு பின்னால் 100 நபர்கள் உழைப்பார்கள். அவர்களின் உழைப்பை வீணாக்காமல் வேலைசெய்தாலே போதும் என்பதே என் எண்ணம்.’’ – `நீயா நானா’ கோபிநாத்.

“நீயா நானாவின் பெரிய வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் இயக்குநர் ஆண்டனிதான். 18 வருடங்கள் ஆனாலும் நாளைக்கு நடக்கப்போகும் தொடரைப் புதிதாகத்தான் பார்க்கிறேன். இப்போது இந்தத் தொடரை இயக்கிவரும் திலீபன், உதவி இயக்குநராக இருந்து, இயக்குநராக உயர்ந்தவர். அவரும் சிறப்பாக வழிநடத்திவருகிறார்.’’ – `நீயா நானா’ கோபிநாத்.

சிறந்த இயக்குநர் குமரன்!

சிறந்த இயக்குநர் விருதை மிஷ்கின் வழங்க, `சிறகடிக்க ஆசை’, `தமிழும் சரஸ்வதியும்’ தொடர்களுக்காக இயக்குநர் குமரன் பெற்றுக்கொண்டார்.

“என்னுடைய முதல் விருதை மிஷ்கின் அவர்களிடம்தான் பெற்றேன். இப்போது மீண்டும் அவரிடம் விருது பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே நான் கற்றதும் பெற்றதும் அதிகம். மெகா சீரியல் என்பது கடினமான வேலை. என்னுடைய எல்லாத் தொடர்களையும் விகடனுக்குத்தான் செய்கிறேன். இது ஆறாவது தொடர். விகடன் குழுமத்துக்கு நன்றி. இயக்குகுநர் சுந்தர்ராஜன் சாருக்கு மிக மிக நன்றி. மிகப்பெரிய இயக்குநர் எங்களிடம் சகஜமாகப் பழகுவது ஆரோக்கியமாக இருக்கிறது.’’ – இயக்குநர் குமரன்.

தொல்ஸ்… சிறந்த இயக்குநர் விருது

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023: சிறந்த இயக்குநருக்கான விருதை நடிகை தேவயானி வழங்க, `எதிர்நீச்சல்’ தொடருக்காக இயக்குநர் திருச்செல்வம் பெற்றுக்கொண்டார்.

“என்னுடைய `காதல் கோட்டை’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை, கவர் போட்டோவாகவைத்து அதற்கு 52 மதிப்பெண்கள் கொடுத்தது விகடன். `கோலங்கள்’ சீரியலில் வரும் அபி கதாபாத்திரம் மிக முக்கியமானது. அதை அளித்த தயாரிப்பாளர் சீனிவாசன் சார், இயக்குநர் திருச்செல்வம் ஆகியோருக்கு நன்றி. இணையம் இல்லாத அந்தக் காலகட்டத்தை `சின்னத்திரையின் பொற்காலம்’ என்றே சொல்லலாம்.’’ – நடிகை தேவயானி.

சிறந்த வில்லி விருது!

ராணி – யுவராணி

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023: சிறந்த வில்லி நடிகைக்கான விருதை நடிகை யுவராணி வழங்க, `பாண்டவர் இல்லம்’ தொடருக்காக ‘அலைகள்’ ராணி பெற்றுக்கொண்டார்.

“என்னுடைய சீரியல் வாழ்க்கை ஆனந்த விகடனின் ‘அலைகள்’ தொடரில்தான் தொடங்கியது. 20 வருடங்கள் முடிந்துவிட்டன. அதற்கு முன்பு சில தனியார் தொலைக்காட்சி விருதுகளை வென்றிருக்கிறேன். இருப்பினும், ஒட்டுமொத்தமாக டி.வி சீரியலுக்கான போட்டியில் வெல்வது இதுவே முதன்முறை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.’’ – நடிகை ‘அலைகள்’ ராணி

இந்தாம்மா ஏய்ய்ய்…

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023: மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு 2023-ம் ஆண்டுக்கான ‘Television Talk of the year’ விருதை இயக்குநர் வசந்த் வழங்க, மாரிமுத்துவின் குடும்பத்தார் பெற்றுக்கொண்டனர்.

மாரிமுத்து குடும்பம்

“அப்பா மறைந்து ஓராண்டு ஆகப்போகிறது. சினிமாவில் வாங்காத விருதுகளை சீரியல் வாங்கிக்கொடுத்திருக்கிறது. அப்பாவுடைய ஆஸ்தான குரு வசந்த் சார். அவரின் கைகளிலிருந்து இந்த விருதை வாங்குவது மனநிறைவாக இருக்கிறது.” – நடிகர் மாரிமுத்துவின் மகன்.

“1993-ல் வைரமுத்து, என்னிடம் மாரிமுத்துவை அனுப்பிவைத்தார். அவர் வருவதற்கு முன்பு எனக்கு `கேளடி கண்மணி’ படத்தைப் பற்றி எழுதி அனுப்பினார். அந்தக் கடிதத்தில், “கேளடி கண்மணி படம் பார்க்கப் போனபோது, என் அம்மா எனக்கு பாப்கார்ன் கொடுத்து அனுப்பினார். ஆனால், படத்தில் முழுதாக மூழ்கவிட்டதால், கொண்டு வந்த பார்கார்னையே மறந்துவிட்டேன்” என்று அதில் எழுதியிருந்தார். இந்த வரிகளை நான் இன்னும் நினைவு வைத்திருக்கிறேன். அப்படி எங்கள் பயணம் தொடங்கியது.” – – இயக்குநர் வசந்த்.

“ஆதி குணசேகரன் கதாபாத்திரம் வழக்கமானது இல்லை. நான் மூன்று மணி நேரம் மாரிமுத்துவிடம் விளக்கிச் சொன்னேன். அவர் நடிக்க ஆரம்பித்த பிறகு இன்னும் விரிவானது. அவர் மண் சார்ந்த நடிகர். அவர் இப்போது இல்லை. ஆனால், நம்மிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுப் போயிருக்கிறார். ஆதி குணசேகரனை நம் கண்முன் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.” – * இயக்குநர் திருச்செல்வம்.

“அமரர் எஸ்.எஸ்.வாசனின் `சந்திரலேகா’ எனக்குப் பிடித்த முதல் பத்து படங்களில் ஒன்று. என் முதல் படமான `கேளடி கண்மணி’ படத்துக்கு விகடன் அட்டைப்படம் கொடுத்தது. இப்படிப் பல வகையில் விகடன் எனக்கு நெருக்கமானது. எல்லோரும் என்னிடம் `பார்ட் – 2’ படம் எடுக்கச் சொல்கிறார்கள். `ரிதம் 2’-வா… `ஆசை 2’-வா என்பதை விரைவில் சொல்றேன்.” – இயக்குநர் வசந்த்.

மக்களின் அபிமான நடிகர்!

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023: `Favorite Actor’ விருதை இயக்குநர் எழில் வழங்க, ‘கார்த்திகை தீபம்’ தொடருக்காக நடிகர் கார்த்திக் ராஜ் பெற்றுக்கொண்டார்.

சிறந்த நகைச்சுவை நடிகை!

ஹரிப்ரியா இசை

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023: சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதை நடிகை குட்டி பத்மினி வழங்க, `எதிர்நீச்சல்’ தொடருக்காக நடிகை ஹரிப்ரியா இசை பெற்றுக்கொண்டார்.

“விகடன் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஏனெனில், விகடனில் வரும் சிறுகதைகளைப் படித்துத்தான் நான் தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டேன். எஸ்.எஸ்.வாசனின் படங்களில் மூன்றில் நான் நடித்திருக்கிறேன்.” – நடிகை குட்டி பத்மினி.

“16 வருடங்களில் நான் பெறும் முதல் விருது இது. நான் ‘கனா காணும் காலங்களில்’ நடித்தேன். பிறகு, சிறிய ஓய்வுக்குப் பிறகு மீண்டும் நடித்தேன். எனக்கு ‘நந்தினி’ என்ற கதாபாத்திரத்தைத் தந்த இயக்குநர் திருச்செல்வம் அவர்களுக்கு நன்றி. மாரிமுத்து சார் என்னை `ஹரிம்மா சூப்பர்’ என்று பாராட்டிக்கொண்டேயிருப்பார். அவருடைய ஊக்கம் எப்போதுமே எனக்கு இருக்கும். அதேபோல என்னுடன் 50% திரை நேரத்தைப் பகிர்ந்துகொண்ட பிரியதர்ஷினி அவர்களுக்கும் நன்றி.’’ – நடிகை ஹரிப்ரியா இசை.

சிலர் அவதூறு பேசியே சம்பாதிக்கிறார்கள்!

ராதிகா சரத்குமார்

“சின்னத்திரையில் கடுமையாக உழைக்க வேண்டும். இது முழுக்கக் கூட்டு உழைப்பு. தமிழ் சீரியல்களுக்கு இயக்குநர் பாலசந்தர்தான் தொடக்கம். பல வித்தியாசமான கதாபாத்திரங்கள், அழுத்தமான திரைக்கதைகளை எழுதியவர். ஆனால், என் நீண்ட சின்னத்திரை வாழ்க்கையில் அவரோடு என்னால் பணியாற்ற முடியாமலேயே போய்விட்டது. அவர் பார்க்கும்போதெல்லாம் சொல்வார், `உனக்காகவே ஒரு கதாபாத்திரத்தை எழுதியிருக்கேன் என்று.” – நடிகை ராதிகா.

“சீரியல்களில் மொத்தமாக 3,000 மணி நேரம் நடித்திருக்கிறேன். படமே 300 படங்கள் செய்திருக்கிறேன். பாரதிராஜாவின் `கிழக்கு சீமையிலே’ என் வாழ்க்கையையே மாற்றிப்போட்டது.

சின்னத்திரைக்கு வரும்போது பலர் என்னைத் தடுத்தார்கள். `மீண்டும் சினிமாவுக்கு வர முடியாது’ என்று எச்சரித்தனர். நான் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. என்னை நம்பினேன். முதலில் நானே எல்லாவற்றையும் செய்தேன். சிலர் என்னை ஏமாற்றுவதாகத் தெரிந்தது. அதனால் மொத்தமாக கார்ப்பரேட்டாக மாற்றினேன். அதுதான் ‘ரேடான்’ நிறுவனம். உங்களின் மனதையும் குறிக்கோளையும் பின்தொடர்ந்தால், வெல்லலாம்.”

“நடிகர்களைப் பற்றி இஷ்டத்துக்குப் பேச 10 பேர் இருக்கிறார்கள். டார்ச் அடித்துப் பார்த்ததுபோலப் பேசுகிறார்கள். அசிங்கமாகவும் கீழ்த்தரமாகவும் பேசும் இந்தப் புழுக்கள் அவதூறு பேசியே சம்பாதிக்கிறார்கள். சினிமாதுறையில் இருப்பவர்கள் ஒன்றுகூடி இதைத் தடுக்க வேண்டும்.” – நடிகை ராதிகா.

`Evergreen Star of Tamil Television’

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023: `Evergreen Star of Tamil Television’ விருதை தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் வழங்க, நடிகை ராதிகா பெற்றுக்கொண்டார்.

“முதல் பான் இந்தியா படத்தை எடுத்தது விகடன்தான். அதை நிகழ்த்திக்காட்டியது ஆனந்த விகடனின் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள். அதேபோல் பல வெற்றிப் படங்களை விகடன் தந்திருக்கிறது.” – தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்.

மக்களின் அபிமான ‘அம்மா’ விருது!

மாளவிகா அவினாஷ்

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023: ‘Favourite Amma’ விருதை நடிகை நிரோஷா வழங்க, ‘கண்ணெதிரே தோன்றினாள்’ தொடருக்காக நடிகை மாளவிகா அவினாஷ் பெற்றுக்கொண்டார்.

“என்னுடைய ஆசான் கே.பாலசந்தருக்கு இந்தத் தருணத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். தொலைக்காட்சித் தொடரில் வருவதை, மக்கள் அப்படியே பார்த்து மறந்துவிடுவார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அது தவறு என்று இந்த விகடன் விருது எனக்குச் சொல்லியிருக்கிறது.’’ – நடிகை மாளவிகா அவினாஷ்.

சிறந்த வில்லன் நடிகர் விருது!

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023: சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி வழங்க, ‘அண்ணா’ தொடருக்காக நடிகர் பூவிலங்கு மோகன் பெற்றுக்கொண்டார்.

பூவிலங்கு மோகன்

“என்னுடைய ஆசான் கே.பாலசந்தர். அவருடைய மகளிடமிருந்து இந்த விருதைப் பெற்றது பாலசந்தரிடமே விருது வாங்கியது போன்ற உணர்வைத் தருகிறது.’’ – நடிகர் பூவிலங்கு மோகன்

“தாதா சாகேப் பால்கே விருது வாங்குவதற்காக கே.பாலசந்தர் தைத்த இரு கோட், சூட்டுகளில் ஒன்றை, அவருடைய மகளும் தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி, நடிகர் பூவிலங்கு மோகனுக்குப் பரிசாக வழங்கினார்.

”ஒரு பெண்ணுக்கு சிறந்த வசனகர்த்தா விருது வழங்குவதில் மகிழ்ச்சி”

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023: சிறந்த வசனத்துக்கான விருதை `பாண்டியன் ஸ்டோர்ஸ்’, `பாக்கியலட்சுமி’ தொடர்களுக்காக எழுத்தாளர் பிரியாதம்பி, நடிகை ரேகாவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

“ஒரு பெண் எழுத்தாளருக்கு விருது வழங்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது `வேட்டையன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துவருகிறேன். அது மனதுக்கு மிகவும் நெருக்கமான பாத்திரமாக இருக்கிறது. 19 வருட வாச்சாத்திப் போராட்டத்தை மையமாகவைத்து ஒரு படைப்பை எழுதிக்கொண்டிருக்கிறேன். விரைவில் அதை இயக்கவிருக்கிறேன்.’’ – நடிகை ரோகிணி

சிறந்த துணை நடிகை!

ரேகா – கனிகா

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023: சிறந்த துணை நடிகை விருதை நடிகை ரேகா வழங்க, `எதிர்நீச்சல்’ தொடருக்காக நடிகை கனிகா பெற்றுக்கொண்டார்.

“என்னுடைய இயக்குநருக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் (`எதிர்நீச்சல்’ டீம்) ஒரு குடும்பமாகவே பணியாற்றினோம். நான் `எதிர்நீச்சல்’ தொடரை ரொம்பவே மிஸ் செய்கிறேன். `என்னுடைய கதாபாத்திரத்துக்கு, `ஈஸ்வரி’ என்று பெயர் வைக்கலாமே…’ என்று நானேதான் இயக்குநரிடம் பரிந்துரை செய்தேன்.’’ – நடிகை கனிகா

”என் குரு சிவாஜி சொன்னது…”

ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, `இது நல்ல கதாபாத்திரம்… இது கெட்ட கதாபாத்திரம்’ என்று எதுவும் கிடையாது. எந்தக் கதாபாத்திரம் என்றாலும் முழுத் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இது என்னுடைய குரு சிவாஜி கணேசன் எனக்குக் கற்றுக்கொடுத்தது.’’ – நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்.

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023: சிறந்த துணைநடிகருக்கான விருதை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் வழங்க, நடிகர் எஸ்.டி.பி.ரொசாரியோ பெற்றுக்கொண்டார்.

“1991-ம் ஆண்டு சென்னைக்கு வந்து, ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களின் நாடகக்குழுவில் சேர்ந்தேன். இப்போது என்னுடைய குருநாதர் கையாலேயே விருது வாங்குவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.’’ – நடிகர் எஸ்.டி.பி.ரொசாரியோ

சிறந்த நகைச்சுவை நடிகர்!

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023: சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை நடன இயக்குநர் கலா வழங்க, `எதிர்நீச்சல்’ தொடருக்காக நடிகர் விமல்குமார் பெற்றுக்கொண்டார்.

விமல்குமார்

“வாசிப்புதான் என் குறிக்கோளை அடைய உதவியது. படிப்புதான் எங்கள் பொருளாதாரத்தை உயர்த்தியது. வறுமையிலிருந்து மீட்டது. விமல் குமாரை, கரிகாலனாக்கியதும் வாசிப்புதான். ஜெயமோகன், டால்ஸ்டாய் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளில் வரும் கதாபாத்திரங்கள் என்னைப் பல இரவுகள் தூங்கவிடாமல் செய்திருக்கின்றன.’’ – நடிகர் விமல் குமார்.

Promising Talent of The Year!

சிறந்த குழந்தை நட்சத்திரம்!

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023: சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை ஆழியா, நடிகர் ராகவ், பீரித்தாவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

ராகவ் – ப்ரீத்தா

“20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘அலைகள்’ சீரியல் இப்போது யூடியூப்பில் வெளியானபோதும், என் கதாபாத்திரத்தை நினைவுவைத்துக் கொண்டாடினார்கள். ஆனால், அந்தத் தொடரில் கடைசி 40 எபிசோடுகளில் மட்டும்தான் வருவேன். அதுதான் என்னை மக்கள் மனதில் இத்தனை ஆண்டுகள் நினைவில் வைத்திருக்கச் செய்திருக்கிறறது.”- நடிகர் ராகவ்.

சிறந்த பின்னணிக் குரல்!

கல்யாணி – வடிவுக்கரசி

ஆனந்த விகடன் சின்னத்திரை 2023 – சிறந்த பின்னணிக் குரலுக்கான விருதை `சிறக்கடிக்க ஆசை’ தொடருக்காக வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் கல்யாணி, நடிகை வடிவுக்கரசியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

“அந்தக் காலத்தில் எந்த வீட்டில் ஆனந்த விகடன் வாங்குகிறார்களோ, அந்த வீட்டில் இருப்பர்களை கௌரவமாகப் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட ஆனந்த விகடன் விருதை நான் வழங்குவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த விகடன் தாத்தா உருவ விருதை நான் வாங்கவில்லையென்றாலும், கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.’’ – நடிகை வடிவுக்கரசி.

தனக்குப் பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞர் கல்யாணிக்கு, மேடையில் கைக்கடிகாரத்தைப் பரிசாக அளித்தார் நடிகை வடிவுக்கரசி.

சிறந்த செய்தித் தொகுப்பாளர்!

ஆனந்த விகடன் சின்னத்திரை 2023 – சிறந்த செய்தித் தொகுப்பாளருக்கான விருதை ரத்னா சிவராமன், விஜே விஷாலியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

செய்தித் தொகுப்பாளர் ரத்னா சிவராமன், 1996 சன் செய்திகள் தொடங்கிய காலத்தில் கலைஞரின் அறிக்கையைப் படித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அப்போது, “ஒரு நல்ல செய்தி வாசிப்பாளராக ஆக வேண்டுமென்றால், கலைஞரின் அறிக்கையை வாசித்தாலே போதும்’’ என்று அவர் குறிப்பிட்டார்.

“அந்த காலத்தில் புழக்கத்தில் இருந்த `ஊனமுற்றோர்’ என்ற வார்த்தைக்கு பதிலாக, ‘மாற்றுத்திறனாளி’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் கலைஞர்தான். என் திறமையை வளர்த்ததில் கலைஞரின் தமிழுக்கு முக்கிய இடமுண்டு’’ என்று உருக்கமாகச் சொன்னார் ரத்னா சிவராமன்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த மூன்று மாதங்களைச் செய்தியாக வாசித்த நாள்களையும், செஸ் வீரர் பிரக்யானந்தாவை ஒரு போட்டியில் தோற்றபோது ஸ்டாலின், “பரவால்லை தம்பி” என்று ஆறுதல் கூறிய செய்தியையும் மறக்க முடியாத தன்னுடைய நினைவுகளாக மேடையில் பகிர்ந்துகொண்டார் செய்தித் தொகுப்பாளர் ரத்னா சிவராமன்.

சிறந்த திரைக்கதை விருது!

அய்யப்பன்

ஆனந்த விகடன் வழங்கும் சின்னத்திரை 2023-க்கான `சிறந்த திரைக்கதை’ விருதை ‘கயல்’ தொடருக்காக அய்யப்பன் பெற்றுக்கொள்ள `மர்மதேசம்’ புகழ் இயக்குநர் நாகா விருதை வழங்கினார்.

Promising Talent of the Year!!!

`Promising Talent of the Year’ விருதை `சிறகடிக்க ஆசை’ தொடருக்காக வெற்றி வசந்த் பெற்றுக்கொள்ள, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விருதைக் கொடுத்துச் சிறப்பித்தார்.

எம்.எஸ்.பாஸ்கர்

“என்னுடைய மகன் ஆனந்த விகடன் விருது வாங்கும்போது எனக்கு என்ன சந்தோஷம் இருந்ததோ, நான் வாங்கும்போது என்ன சந்தோஷம் இருந்ததோ… அதே அளவுக்கு சந்தோஷம் இப்போதும் இருக்கிறது. நானும் இதேபோல சின்னத்திரையில் தோன்றியிருப்பதால், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.’’ – நடிகர் எம்.எஸ் . பாஸ்கர்

ஆனந்த விகடன் வழங்கும் சின்னத்திரை `Promising Talent of the Year’ 2023 விருதைப் பெற்றுக்கொண்ட வெற்றி வசந்த், ஸ்விக்கியில் வேலை பார்த்த நாள்களை, `வேலைக்காரன்’ திரைப்பட செட்டில் எடுத்த புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். அதேபோல `சர்க்கார்’ படத்தில் நடிகர் விஜய்க்கு எஸ்கார்ட்டில் வேலை பார்த்த நாள்களையும் நினைவுகூர்ந்தார்.

நடிகர் வெற்றி வசந்த், “என் அப்பாதான் எனக்கு சினிமாவைக் கற்றுக்கொடுத்தார். அப்போது ஆனந்த விகடனில் சினிமா விமர்சனங்களை படித்துத்தான் படங்களின் தன்மையைத்க் தெரிந்துகொள்வோம். அப்படிப் படித்து வளர்ந்த `ஆனந்த விகடனி’லிருந்தே விருது எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று சொல்லி, விகடன் விருதை முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் – 2023

இன்னும் சிறிது நேரத்தில்…

2023-ம் ஆண்டுக்கான சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மேடையேற்றி மகுடம் சூட்டத் தயாராக இருக்கிறது விகடன். பலதரப்பட்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை கௌரவிக்கும் மாபெரும் விழாவாக இன்று நடக்கவிருக்கிறது, ‘ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் – 2023.’

‘ஃபேவரைட்’ பிரிவுகளில் மக்கள் வாக்களித்தவர்களும் இன்று விருதுகளை பெறவிருக்கின்றனர். யார் யார், எந்தெந்த விருதுகளை வெல்லப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.